Home நாடு உஸ்தாஜின் பேச்சுக்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் கடும் கண்டனம்!

உஸ்தாஜின் பேச்சுக்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் கடும் கண்டனம்!

819
0
SHARE
Ad

Hindu Dharma Mamandram Logoகோலாலம்பூர், ஜூலை 31 -இந்து மதத்தை இழிவு படுத்துவது போல் கருத்துரைத்த உஸ்தாஜ் சாஹுல் ஹமீட்டின் செயலுக்கு, மலேசிய இந்துக்களின் சார்பாக மலேசிய இந்துதர்ம மாமன்றம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகமலை செல்லியலுக்கு அனுப்பியுள்ள பிரத்யேக பத்திரிகை அறிக்கையில், “இந்து கடவுளை அவமதிப்பது போல் கருத்துரைத்துள்ள உஸ்தாஜின் காணொளி அறிக்கைக்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.

அந்த சர்ச்சைக்குரிய காணொளி முகமட் இஸுமான் என்பவரால் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற நட்பு ஊடகங்களின் வாயிலாக அனைவருக்கும் பரவி வருகின்றது.

#TamilSchoolmychoice

‘Ustaz Shahul Hamid 2014 – Serbuk Kari babas dan Alagapas (sempoi)’ என தலைப்பிடப்பட்டுள்ள அந்த 1.02 நிமிட காணொளியில், உஸ்தாஜ் இந்து உணவு முறைகள் குறித்து மிகவும் இழிவாகப் பேசியுள்ளார்.

மேலும், பிரபல மசாலை தூள் தயாரிப்பு நிறுவனங்களான அழகப்பாஸ் மற்றும் பாபாஸ் ஆகியவற்றின் தயாரிப்பு பொருட்களை, இஸ்லாம் மக்கள் வாங்கிப் பயன்படுத்துவது தவறு என்பது போலும் உஸ்தாஜ் கருத்துரைத்துள்ளார்.

இது குறித்து இராதாகிருஷ்ணன் மேலும் கூறுகையில்,

“நாடெங்கிலும் உள்ள மாமன்றத்தின் உறுப்பினர்கள் உஸ்தாஜின் பொறுப்பற்ற பேச்சால் மிகவும் புண்பட்டுள்ளனர். அந்த காணொளி இந்து மதத்தையும், மலேசிய இந்துக்களையும், பிரதமரின் ஒரே மலேசியா கொள்கையையும் அவமதிக்கின்றது.”

“பல்லின மக்களும், பல சமயங்களைச் சேர்ந்த சமூகத்தினரும் ஒன்றாக வாழும் நாடு மலேசியா. இங்கு அனைவரும் பல்வேறு கலாசார உணவுகளையும் உண்கின்றனர். இது தான் உண்மையான ஆசியா. இது நமது நாட்டின் தனிப்பட்ட சிறப்பம்சம். நமக்குள் காணப்படும் வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு, நமது மூதாதையர்களைப் போல் மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இனத்தையோ அல்லது மதத்தையோ அவமதிப்பது போல் கருத்துரைப்பவர்கள் மற்றும் அறிக்கைவிடுபவர்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அது நமது நாட்டின் நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்”

“நல்ல கல்வி பின்புலம் கொண்ட மரியாதைக்குரிய மக்கள் இது போன்ற தவறான கருத்துகளை வெளியிடக்கூடாது. தவறான வார்த்தைகள் விஷம் போன்றது. குறிப்பாக இளைஞர்களின் மனதில் அவை நஞ்சை விதைத்துவிடும். பொதுவில் எதையும் பேசுவதற்கு முன்பாக மக்கள் மனிதாபிமானத்தோடு யோசிக்க வேண்டும். எல்லா இனங்களுக்கும், அவர்களின் நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளிக்கும் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றி வருவது நமக்கு மிக முக்கியமான ஒன்றாகும். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல” இவ்வாறு இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யூடியூப்பில் இந்த சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட நபர், மலேசிய இந்துக்கள் மேலும் புண்படுவதற்குள், அதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சு விசாரணை நடத்தி, உஸ்தாஜ் சாஹுல் ஹமிட் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய இந்துதர்ம மாமன்றம், உள்துறை அமைச்சிற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்துக்களுக்கென தேசிய அமைப்பை நிறுவுங்கள்

மலேசிய இந்துக்களுக்கென தேசிய அமைப்பு ஒன்றை அரசாங்கம் நிறுவி அதன் மூலம் இந்து விவகாரங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்துக்களை புண்படுத்தும் இது போன்ற பேச்சுக்களையும், அறிக்கைகளையும் எதிர்காலத்தில் தடுத்து நிறுத்துவதில் அந்த அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் இராதாகிருஷ்ணன் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இது போன்ற பொறுப்பற்றவர்களின் பேச்சுக்களுக்கோ அல்லது கருத்துக்களுக்கோ எதிர்மறையாக  செயல்படாமல் மலேசிய இந்துக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், நல்லதையே நினைத்து, மனதையும், சக்தியையும் தேசிய ஒற்றுமை மற்றும் குழந்தைகளின் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் வலியுறுத்தியுள்ளது.