புக்கிட் மெர்தாஜம், ஆகஸ்ட் 1 – நிகழ்வு ஒன்றில் இந்தியர்களின் சமயத்தையும் நம்பிக்கைகளையும் இழிவாகப் பேசியதற்காக இஸ்லாமிய மதபோதகர் சாகுல் அமீட் நேற்று பினாங்கு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் பிணையில் (ஜாமீனில்) விடுதலையானார்.
முஸ்லிம்கள், இந்தியர்களின் தயாரிப்பு பொருட்களான அழகப்பாஸ் மற்றும் பாபாஸ் மசாலைகளை வாங்கக் கூடாது என்று பேசியது மட்டுமல்லாமல் இந்து தெய்வங்களையும் இந்துக்களின் நம்பிக்கையையும் மிகவும் இழிவாகப் பேசி, நாடு முழுமையிலும் உள்ள இந்தியர்களின் கண்டனத்திற்கும் கோபத்திற்கும் ஆளானார்.
இதன் காரணமாக அவர் மேல் நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட புகார்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன.
அவரின் தவறுக்காக அவர் மன்னிப்புக் கேட்ட போதிலும் மக்கள் அவரின் செயலுக்கு நிச்சயம் தண்டனை தரப்பட வேண்டும் என்று பரவலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்று பினாங்கு காவல் துறை அதிகாரிகளால் தேச நிந்தனை சட்டம் பிரிவு 4(1) கீழ் சாகுல் அமீட் கைது செய்யப்பட்டார்.
இவர்மீது புக்கிட் மெர்தாஜம்,பண்டார் பெர்டா மாவட்ட காவல் தலைமையகத்தில் 3 மணி நேரம் காவல் துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பின் பிணை மனுவின் (ஜாமீன்) கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதனை பினாங்கு காவல் துறை துணைத் தலைவர் டத்தோ ஆ.தெய்வீகன் உறுதிப்படுத்தினார்.
வழக்கமாக இதுபோன்ற விவகாரங்களில் தாமதமாக செயல்படும் மலேசிய காவல் துறை, இந்த விவகாரத்தில் மட்டும் இந்திய சமுதாயத்தில் எழுந்த பரவலான கண்டனங்களை அடுத்து உடனடியாக அதிரடியில் இறங்கி சாகுல் அமீட்டைக் கைது செய்துள்ளது.
காவல் துறையின் நடவடிக்கை மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளதோடு, சாகுல் அமீட்டும் முன்வந்து மன்னிப்பு கோரியுள்ளதை பலரும் பாராட்டிக் கூறியுள்ளனர்.