புனே, ஆகஸ்ட் 6 – மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் புனேவில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலின் கிராமத்தில் கடந்த 30-ம் தேதி கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 44 வீடுகள் மண்ணில் புதையுண்டன.
வீடுகளில் இருந்த 160-க்கும் அதிகமானவர்கள் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த சுமார் 500 வீரர்கள் இவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின் விளைவாக இதுவரை இடிபாடுகளிலும், மண்ணிலும் புதையுண்டிருந்த 144 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் நிவாரண கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மண் அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட மீட்பு வாகனங்கள் விரைந்து செயல்பட முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு மேலும் தொடர வாய்ப்புள்ளதால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளை வல்லுனர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 33 விலங்குகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.