புனே, ஆகஸ்ட் 2 – புனே அருகே நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 130–க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகா மாலின் என்ற இயற்கை எழில்மிகு மலையடிவார கிராமத்தில் கன மழை காரணமாக கடந்த புதன்கிழமை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தை சேர்ந்த 44 வீடுகளும், ஒரு கோவிலும் முற்றிலுமாக மண்ணில் புதைந்தன.
இதனால் அந்த கிராமமே இயற்கையின் சீற்றத்தில் சிக்கி புதையுண்டது. இதில் 200–க்கும் மேற்பட்டவர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். கடந்த ஆண்டு உத்தரகாண்டில் நடந்த நிலச்சரிவு துயரத்தை தொடர்ந்து, தற்போது இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழையை பொருட்படுத்தாமல் மீட்பு பணி இரவு– பகலாக நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 378 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் தீயணைப்பு படை வீரர்கள், சுற்றுவட்டார கிராம மக்களும் மீட்பு பணியில் தீவிரம் காட்டி உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு வரை 51 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் 3 மாத கைக்குழந்தை – தாய் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்றி உடல்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது தோண்ட தோண்ட பிணகுவியலாக உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் நேற்று மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.
மீட்கப்பட்ட உடல்கள் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் உடல்களை மொத்தமாக குவித்து போட்டு தகனம் செய்து வருகிறார்கள்.
இன்னும் 130 பேர் வரை மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.