புனே, ஜூலை 31 – மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பெய்து வரும் கன மழை காரணமாக பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 140 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
புனே மாவட்டம், அம்பேகான் வட்டத்தில் உள்ள மாலின் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக நேற்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் திடீரென கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
மாலின் கிராமத்திலுள்ள பிரம்மாண்ட மலையின் ஒரு பகுதி முழுவதும் பெயர்ந்தது. இதில் மலையில் இருந்து கற்பாறைகள், சகதி போன்றவை உருண்டோடி, மலையையொட்டி இருந்த வீடுகள் மீது விழுந்து மூடின. இதில், அங்கிருந்த 70 வீடுகளில், 46 வீடுகள் புதையுண்டன.
நிலச்சரிவு அதிகாலை ஏற்பட்டதால் மாலின் கிராம மக்கள் அனைவரும் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், நிலச்சரிவில் இருந்து அவர்களால் தப்பிச் செல்ல முடியவில்லை.
இந்தச் சம்பவத்தையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 400 பேர் சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேவைப்பட்டால், அவர்களுக்கு உதவி செய்வதற்காக கூடுதலாக இப்படையைச் சேர்ந்த 240 பேர், காந்திநகரில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணியில் 2 ஆளில்லா விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சேற்றுக்குள் சிக்கிய 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.