Home அவசியம் படிக்க வேண்டியவை ‘செல்லியல்’ உலகக் கிண்ண செய்திகளுக்கு வாசகர் பாராட்டு

‘செல்லியல்’ உலகக் கிண்ண செய்திகளுக்கு வாசகர் பாராட்டு

658
0
SHARE
Ad

Mani 1கோலாலம்பூர், ஜூலை 31 – செல்லியல் தகவல் ஊடகத்தின் நவீன தொழில் நுட்பமும், செய்திகளும் தொடர்ந்து உலகெங்கும் உள்ள பல்வகைப்பட்ட வாசகர்களைக் கவர்ந்து வருகின்றது.

அந்த வகையில் சென்னை வாசகர் மணி மு.மணிவண்ணன் நமது செய்திகளைப் பாராட்டியுள்ளதோடு, அவருக்கு நேர்ந்த அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவரது கடிதம் பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

அன்புள்ள செல்லியல் குழுவினருக்கு,

உங்கள் செய்திகளைத் தொடர்ந்து படித்துவருபவன் என்ற முறையில் உங்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன். 

செய்திகளை கூகிள் செய்திகளிலும், வலைத்தளங்களிலும் பின்னர் முகநூல் தளங்களிலும் படித்துக் கொண்டிருந்த எனக்கு, நான் விரும்பும் செய்திகளை எனது திறன்பேசியிலேயே உடனுக்குடன் தந்துவிடும் செல்லியல் வாராது வந்த மாமணி போல் பயன் தருகிறது. 

அண்மையில் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணம் செய்து கொண்டிருந்த போது உலகக்கிண்ணக் கால்பந்தாட்டச் செய்திகள் சுடச்சுட எனக்குச் செல்லியல் மூலம் வந்து சேர்ந்தது.  அதே போல் மலேசிய விமானங்களைப் பற்றிய திடுக்கிடும் செய்திகளும் எந்த வித அரசியல் சார்பும் இல்லாமல் நேரடிச் செய்தியாய் அனுப்பியிருந்தீர்கள். வல்லரசுகளின் போட்டிகளுக்கு நடுவே உண்மை எது பொய் எது என்று தெரியாத நிலையில் நேரடிச் செய்தி மட்டுமே தேவை.

வெளிநாட்டில் பயணம் செய்துகொண்டிருந்தாலும் தமிழகச் செய்திகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தீர்கள்.  வட அமெரிக்காவில் ஒவ்வொரு பைட்டுக்கும் டாலரில் பணம் கட்ட வேண்டியிருந்ததால், அளவோடு, சுருக்கமாக ஆனால் தேவையான செய்திகளை அனுப்பியிருந்தது பாராட்டுக்குரியது.

செய்திகளை முகநூலிலும் மின்னஞ்சலிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் எளிமையும் மிகுந்த பயனளிக்கிறது.  தற்போதெல்லாம் திறன்பேசியில் செய்திகளை நான் வேறெங்கும் நாடுவதில்லை. 

தெளிவான, எளிமையான தமிழ்நடையை விரும்பும் எனக்குச் செல்லியலின் நடை பெரும்பாலும் பிடித்திருக்கிறது. 

ஆனால் அவ்வப்போது புழக்கத்திலிருக்கும் நல்ல தமிழ்ச்சொற்களை விட்டுவிட்டு மறந்து போன சமஸ்கிருதச் சொற்களைப் பிடித்துக் கொண்டு வருகிறீர்கள் என்ற ஒரு குறை இன்னும் இருக்கிறது. துணைத்தலைவர், உறுப்பினர், செயலர் என்ற சொற்களிருக்கையில் உபதலைவர், அங்கத்தினர், கார்யதரிசி என்ற சொற்கள் தேவையில்லை, இல்லையா?

அதே போல் தொலைத்தொடர்பில் இருக்கும்போது குறைவாகவும், வீட்டில் வலைத்தொடர்பில் இருக்கும்போது கூடுதலாகவும் செய்திகளைக் கொடுப்பது பற்றிச் சிந்தியுங்கள். வீட்டில் வலைத் தொடர்பிலிருக்கும்போது செய்திகளையும் பார்க்க முடியும். சாம்சங் நோட் 2இன் குறுகிய திரைகளில் சுருக்கமாகச் செய்திகளைப் படிக்கும்போது இதை எழுதிய, தொகுத்த ஆசிரியர்களின் திறமையை வெகுவாகப் பாராட்டத் தோன்றுகிறது.

நல்ல தொடக்கம்.  நீங்கள் மேன்மேலும் ஆல்போல் தழைத்து வளர்ந்திட என் வாழ்த்துகள்.

 

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

மணப்பாக்கம், சென்னை

(செல்லியலின் செய்திகள், உள்ளடக்கம், தொழில்நுட்பம் குறித்த வாசகர்களின் பாரபட்சமற்ற கருத்துக்கள் தொடர்ந்து செல்லியலில் பதிவேற்றம் செய்யப்படும். கருத்துகள் இருப்பின் வாசகர்கள் editor@selliyal.com என்ற இணைய அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்)