கோலாலம்பூர், ஜூலை 10 – உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடங்கியது முதல் அதன் முடிவுகளையும், நடைபெற்றுவரும் போட்டிகள் குறித்தும் செல்லியல் தகவல் ஊடகம் உடனுக்குடன் செய்திகள் வெளியிட்டு வருவது நமது வாசகர்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தங்களின் திறன்பேசிகளில் (smart phones) செல்லியல் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்களுக்கு ஆட்டம் முடிவடைந்ததும் முடிவுகள், படங்களோடு உடனடி செய்திகளாக – Push Message – முறையில் அனுப்பப்படுகின்றன.
மேலும் செல்லியலின் ஃபேஸ்புக் தளத்திலும், அதன் ட்விட்டர் தளத்திலும் இந்த உலகக் கிண்ணக் காற்பந்து செய்திகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒருசேர பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, செல்லியல் மேற்கொண்டு இந்த புத்தாக்க முயற்சிகளுக்கு வாசகர்களிடையே நிறைய அளவில் வரவேற்பு கிடைத்து வருகின்றது.
ரெ.கார்த்திகேசுவின் பாராட்டு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவரும் நாடறிந்த பிரபல எழுத்தாளரும் – விமர்சகருமான முனைவர் ரெ.கார்த்திகேசு செல்லியலின் இந்த முயற்சிகள் குறித்து பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-
அன்புடைய செல்லியல் ஆசிரியர் அவர்களுக்கு,
செல்லியல் என் தொலைபேசியில் வெகுநாட்களாக இருந்த போதும்
அதில் என் கவனம் அதிகம் செல்லவில்லை. ஆனால் அண்மையில்
உலகக் காற்பந்துக் கிண்ணம் பற்றிய பரபரப்பில் எல்லாவிதச்
செய்தித் தொகுப்புக்களையும் தேடி அலைந்துகொண்டிருந்தபோது
முத்தரசனின் சில செய்தித் தொகுப்புக்களும் கண்ணோட்டங்களும்
மிகச் சுவையாக இருப்பதைக் கண்டேன். சுருக்கம், தெளிவு, விரைவு,
ஆகியவை ஈர்த்தன. ஆகவே இப்போதெல்லாம் காலையில் எழுந்ததும்
(இரவில் ஒளிபரப்புப் பார்க்க உடல் இடம் தரவில்லை) முதல் வேலையாக
செல்லியல் செய்திகளைத்தான் பார்க்கிறேன். முத்தரசனின் எழுத்துக்கள்
கச்சிதமாகவும் கட்டுக்கோப்போடும் உள்ளன. காற்பந்து செய்திகளைப்
பார்க்கப் போனவன், இப்போது எல்லாச் செய்திகளிலும் முதல் முறை
விழிப்பது செல்லியலில்தான். எனது வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரெ.கா.
(ரெ.கார்த்திகேசு)
பின்குறிப்பு : ரெ.கார்த்திகேசு போன்ற மூத்த, அனுபவம் மிக்க எழுத்தாளர்களின் பாராட்டு விமர்சனங்கள் எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருகின்றது என்பதோடு எங்களின் பணிகளில் மேலும் துடிப்புடன் நாங்கள் செயல்பட எங்களின் ஆர்வத்தையும் கூட்டியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
-(ஆசிரியர்)