சாண்ட க்ரூஸ், ஜூலை 10 – கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான போதை மருந்து எடுத்துக் கொண்ட காரணத்தால் படகில் இறந்து கிடந்த சிலிகான் வேலி அதிகாரியின் மரணம் ஒரு கொலை என்பதை நிருபிக்கும் வகையில் காணொளி ஒன்றை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்ட க்ரூஸ் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கண்டுபிடிக்கப்பட்ட காணொளியில், கடந்த நவம்பர் மாதம் பாரஸ்ட் ஹேய்ஸ் (வயது 51) (படம்) என்பவருக்கு அதிக அளவிலான ஹெராயின் போதை வஸ்துவை உடம்பில் ஏற்றிய காட்சியில் காணப்படும் பெண் அலிக்ஸ் திக்கல்மன் (வயது 26) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஒரு விலை மாது”என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 4 -ம் தேதி காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வாடிக்கையாளர் போல் பாசாங்கு செய்து அவளை ஒரு விடுதியில் கைது செய்தனர்.
அதன்பின்னர், அப்பெண்மணி கொலை மற்றும் போதை பொருள் உபயோகித்த குற்றத்திற்காக நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
ஆனால் அவர் தன் குற்றத்தை மறுத்து எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை மாறாக ஒரு வழக்கறிஞரை வைத்து $1.5 மில்லியன் கொடுத்து ஜாமினுக்கு விண்ணப்பித்தார்.
கூகுள், ஆப்பிள் போன்ற முன்னணி தொழிநுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவரான ஹேய்ஸ், கடந்த நவம்பர் மாதம் அதிக அளவிலான போதை மருத்து உட்கொண்டு, தனது ‘தி எஸ்கேப்’ என்ற படகில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாண்ட க்ரூஸ் காவல்துறையின் துணைத் தலைவர் ஸ்டீவ் க்ளார்க் கூறுகையில், “புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட காணொளியின் படி அந்த பெண்மணி போதை பொருளை, ஹேய்ஸின் உடலில் செலுத்திவிட்டு அவரை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.அது மட்டுமல்லாமல் நிலைமை மோசமாக இருக்கும் பொழுது கூட அதிகாரிகளை அழைக்கவில்லை”என்று கூறியுள்ளார்.
மேலும், “அந்த காணொளியில் அவள் கொஞ்சமும் இரக்க குணம் இல்லாமல் தன் சம்பந்தப்பட்ட பொருள்களை சேகரித்துக் கொண்டு மிகவும் சாதரணமாக ஹேய்ஸ் உடலை தாண்டி செல்கிறார். ஒரு கட்டத்தில் அந்த உடலின் மீது ஏறி ஒரு குவளையில் மீதம் இருந்த மது பானத்தை அருந்துகிறார்” என்று க்ளார்க் ஏபிசி-ன் கேஜிஓ தொலைக்காட்சிக்கு அளித்த செய்தியில் தெரிவித்தார்.