Home கலை உலகம் ஆஸ்ட்ரோ “தமிழ்லட்சுமி” – சிறப்புகளும், ஏற்படுத்திய ‘வக்கிரபுத்தி’ வெறுப்புணர்வுகளும்…

ஆஸ்ட்ரோ “தமிழ்லட்சுமி” – சிறப்புகளும், ஏற்படுத்திய ‘வக்கிரபுத்தி’ வெறுப்புணர்வுகளும்…

698
0
SHARE
Ad

(அண்மையில் ஆஸ்ட்ரோ ‘வானவில்’ அலைவரிசையில் ஒளிபரப்பாகியது “தமிழ்லட்சுமி” உள்நாட்டு நாடகத் தொடர். பரவலான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. அதே வேளையில் தொடரின் இறுதிப் பாகங்களில் இடம் பெற்ற காட்சிகளும், சம்பவங்களும் முகச் சுழிப்பை ஏற்படுத்தின. போற்றப்பட வேண்டிய குடும்ப உறவுகளின் வக்கிர புத்தித்தனம் கொண்ட மனிதர்களைக் காட்டின. தொடரைப் பார்க்கும் குடும்ப உறுப்பினர்களை நெளிய வைத்தன. அதுகுறித்து செல்லியல் வாசகி திருமதி சா.விக்னேஸ்வரி அனுப்பியிருக்கும் விமர்சனம் இது)

தமிழ்லட்சுமி தொடர் தொடங்கியபோது, மலேசியாவில் தயாரிக்கப்பட்ட நாடகமா இது என பெருமையுடன் பார்க்கப்பட்டது. அதற்குக் காரணம், மூன்று குடும்பங்களைச் சுற்றியே வந்த கதையில் இயல்பான வசனங்கள், வழக்கமாக ஒரு குடும்பம் எதிர்நோக்கும்  சுவாரசியமான சம்பவங்கள், என தொடர் நகர்ந்ததாகும்.

பல இடங்களில் சற்று இழுவையாக இருந்தாலும், பேசப்பட்ட வசனங்களும், ஒரே மாதிரி சம்பவங்களும் திரும்பத் திரும்ப வந்தாலும், அதைப் பார்ப்பவர்கள் பெரிதாக எண்ணவில்லை. ஏனெனில் நடித்தவர்கள் புதியவர்கள் என்பதாலும், நல்லதொரு குடும்பப் பாங்கான நாடகத்தைத் தயாரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதாலுமே பொறுத்துக் கொண்டோம்.

#TamilSchoolmychoice

தமிழ்நாட்டு இறக்குமதி நாடகங்களை விட தரமாக, எல்லோரும் குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து இரசிக்கக்கூடியதான ஒரு நாடகத்தை நம் மலேசியர்கள் இயக்கியிருக்கிறார்களே என்ற கர்வம் என்னைப் போன்றவர்களிடம் இருந்தது. சில  வருடங்களாக தொலைக்காட்சித் தொடர் நாடகம் எதையும் பார்க்காமல் நிறுத்திய நான் இந்த நாடகத்தை மட்டும் தொடர்ந்து விடாமல் பார்த்தேன்.

நண்பர்கள், ஏன் வெளிநாட்டில் உள்ளவர்களையும் எப்படியாவது, பார்க்கப் பரிந்துரை செய்தேன்.

சிறந்த நடிப்புத் திறன்

இதில் நடித்தவர்கள் அனைவருமே தங்கள் பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தனர். ஆனாலும் தமிழ் கதாபாத்திரத்தில் நடித்த ஹேமாஜி சற்று கூடுதலாக அனைவரின் மனதையும் கவர்ந்தார் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் நாடகத்தின் இறுதிக்கட்ட அத்தியாயங்கள் நமது எல்லா மதிப்பீடுகளையும் ஒரேயடியாகப் போட்டுடைத்தது. திருப்பம் என்ற பெயரில் தொடரில் கொண்டுவரப்பட்ட மாற்றம் நமக்கு அதிர்ச்சியை அளித்தது.

பல உதாரணங்களைச் சொல்லலாம்.

தமிழ் வீட்டு சின்னப்பெண் கல்லூரிக்குப் போவதாகச் சொல்லி கூத்தடிப்பதை இவ்வளவு தூரம் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டியதில்லை. அதுவும் ‘அங்கிளை’ மட்டுமே, திருமணமானவர்களிடம் மட்டும் தான் நட்பாக இருப்பாராம். இதுவும் ஒரு மிக மோசமான எடுத்துக்காட்டு. குடும்பத்துடன், பிள்ளைகளுடன் பார்க்கும்போது உடல் கூசியது.

தொடரின் முதல் ஓரிரு அத்தியாயத்தில் ஒரு காட்சியில் ஒரு பதின்ம வயது மாணவன் இன்னொரு மாணவனிடம் கேட்கிறான் “என்ன யோசனையில் இருக்கிறாய். ஆசிரியரின் பெண்டாட்டியைப் பற்றி கனவு காண்கிறாயா?”

இதுபோன்ற வசனங்கள், வக்கிர புத்தி எண்ணங்களை, குடும்பத்தோடு பார்க்கும் ஒரு நாடகத் தொடரில் விதைக்கலாமா?

தவறான கர்ப்பம் – தீர்வு என்ன?

ஹேமாஜி

இளவயதில் வயது கோளாறு காரணமாக காதலித்து, கர்ப்பமாகும் பெண்களுக்கு அதன் விளைவுகளைச் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நம் நாட்டில் இப்போது நடந்துகொண்டிருக்கும்  இதுமாதிரி சம்பவங்களுக்கு நல்லதொரு படிப்பினைத் தரும் கருத்துப்பதிவாகவாவது இருந்திருக்கும்.

அதை விட்டு விட்டு, அப்படிப் பிறந்த பிள்ளையை வளர்ப்பது மட்டுமே தீர்வாகிவிடுமா? என்ன சொல்ல வருகிறார் இயக்குனர்?

 

மனைவி மீது சந்தேகப்படும் கணவன்

அடுத்து இன்னொரு சிசிடிவி குடும்பம். அவன்  நடவடிக்கைகளுக்குக் காரணம் அவனது மனைவி மேல் கொண்டிருக்கும்  மிகைப்பற்றீடு (பொஸஸிவ் ) என்பதாக சித்தரித்திருக்கிறார்கள்.  ஆரம்பத்தில் நகைச்சுவையாக இருந்தாலும், போகப்போக கணவன் மனைவி இருவரின் உரையாடல்களுமே எல்லை மீறுவதாக, அமைந்துவிட்டது. பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்க மட்டுமல்லாது, தவறான வழிகாட்டல் வகையைச் சார்ந்துவிடுகிறது நாடகம்.

அதிலும் முகநூல் (பேஸ்புக்)மூலம் பல கண்ணியமான நட்புறவுகள் தொடரும் இந்தக் காலத்தில் அற்புதமான அந்த தொடர்புத் தளத்தை பல இடங்களில் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜாஸ்மின் மைக்கல்

எல்லாவற்றிற்கும் மேலாக நாடகத்தில் மதிக்கத்தக்க பாத்திரப்படைப்பாக ஆரம்பத்தில் இருந்து உலா வந்தது, உடற்பயிற்சிக்கூடம் நடத்தும் பிரேம் கதாபாத்திரம்.  ஒழுக்கத்திற்கும், குடும்பத்தில் ஒரு அக்காள் கணவர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றும் எண்ண வைத்தது. மைத்துனியின் நலன்களில் அக்கறையோடு கொண்டாடும் ஒருவர் அனைவருக்குமே அமையவேண்டும் என்ற ஏக்கத்தையும் பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தியிருந்தது. இயக்குனரின் ஆரோக்கியமான சிந்தனையைப் பார்த்து, நெகிழ்ந்து போனேன். பெருமையாகவும் இருந்தது.

இதைப்போல நாமும் இருக்கவேண்டும் என இன்றைய தலைமுறையினரை நினைக்க வைக்கும் அளவுக்கு ஒரு நேர்த்தியான  கதாபாத்திரத்தை உலாவவிட்டு, கடைசி மூன்று நாட்களும் அவனது நடத்தைகளை ஜீரணிக்க முடியாமல் செய்துவிட்டனர்.

இதைவிட ஒரு கேவலமான பாத்திரப்படைப்பை அமைக்க முடியாது. அதற்குப் பக்கம் பக்கமாக அருவருக்கத்தக்கத் தெளிவான வசனம் வேறு.

இந்நாடகத்தின் மூலம் ஒரு நல்ல உறவுமுறையை அழகாக சொல்ல வந்து, பின் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தியிருக்கின்றனர்.

மூன் நிலா

எத்தனையோ குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இந்த நாடகத்தைப் பார்த்திருப்பார்கள். அவர்களுக்குள் தங்களின் அக்காள் கணவர் பற்றிய எத்தகைய தவறான எண்ணங்களை மைத்துனிகளிடம் இந்த நாடகத்தின் மூலம் விதைத்திருக்கிறார்கள் என்பதை படக் குழுவினர் உணர்கிறார்களா?

நடப்பதைத் தான் காட்டுகிறோம் என்று கூறலாம். எல்லா நாட்டிலும் எல்லா சமுதாயங்களிலும் வக்கிர புத்தி எண்ணங்களும், கீழ்த்தரமான சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

இவையெல்லாம் ஆங்காங்கே நடக்கும் ஓரிரு சம்பவங்கள்தானே தவிர அதுவே நமது வாழ்க்கை முறை அல்ல!

மேலும், இத்தகைய வக்கிர புத்தி எண்ணங்கள், நடவடிக்கைகள் ஒரு சில மனிதர்களின் மனப் பிறழ்வுகள், மனநோய்கள் என்றுதான் மருத்துவ உலகமும் கூறுகிறது.

எனவே, அத்தகைய அசிங்கங்களையெல்லாம் ஒரு குடும்பத் தொடர் நாடகத்தில் கொண்டு வந்து கொட்ட வேண்டியதில்லை.

சரி! அப்படியே அதைக் காட்ட வேண்டுமானால், தனியாக ஒரு படம் எடுத்து “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற முத்திரையோடு காட்டி விட்டுப் போகலாம்! பிரகாஷ்ராஜ் நடித்த “ஆசை” திரைப்படம்போல!.

பார்ப்பவர்கள் பார்ப்பார்கள்! தவிர்ப்பவர்கள் தவிர்ப்பார்கள்!

அல்லது “நக்கீரன்” போன்ற ஆவணத்தொடர்களில் காட்டுங்கள்!

ஆனால், ஒரு குடும்பத் தொடர் என்ற விளம்பரத்தோடு, அனைவரும் வயது வரம்பின்றி பார்க்கலாம் என ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் இப்படி குடும்ப உறவுகளைத் தவறாகச் சித்தரிக்கும் சம்பவங்களைப் புகுத்தாதீர்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம்.

தற்கொலைதான் தீர்வா?

நமது சமூகத்தில் ஊடுருவியிருக்கும் மற்றொரு தவறான அணுகுமுறை தற்கொலை. இதைத் தடுப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் வழி காணாமல், பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்வது போல் காட்டுவது இன்னொரு மோசமான சித்தரிப்பு.

இதைப்போல  எங்கும் நடந்துகொண்டிருக்கிறது என்பது போலவும் இறுதியில் சொல்லியிருக்கிறார்கள். தப்பு செய்தவன் தப்பி விடுவானாம். பாதிக்கப்பட்டவள் தற்கொலை செய்துகொள்வாளாம்.

தயவு செய்து, ஒரு சமுதாயத்தில் நல்லெண்ணங்களை வளர்க்க முடிந்தால் படமோ, நாடகமோ தயாரியுங்கள். வக்கிரமான எண்ணங்களை விதைத்து, நீரூற்றி வளர்க்க இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தாதீர்கள்.

நல்ல உதாரணமாக்க வேண்டிய மாமன்-மைத்துனி உறவைக் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி நாடகத்தின் தரத்தை தாழ்த்திவிட்டார் இயக்குனர் என்பதை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறேன்.

தமிழ் நாட்டின் இறக்குமதி நாடகங்களில் இதுபோன்ற குடும்ப உறவுகளின் மோசமான சீரழிவுகள், சித்தரிப்புகள் காட்டப்படுகின்றன என்பதால்தான் அவற்றைத் தடை செய்ய வேண்டும் அல்லது தணிக்கை செய்ய வேண்டும் என்ற அறைகூவல்கள் தொடர்ந்து விடுக்கப்படுகின்றன.

அதற்கு மாற்றாக உள்நாட்டுத் தமிழ் நாடகத் தொடர்களைப் படைப்போம். தமிழ்லட்சுமியின் தொடக்க அத்தியாயங்களும் அப்படித்தான் அமைந்தன. மலேசியப் பண்பாட்டையும், வாழ்க்கை நடப்புகளையும் விவரித்தன.

ஆனால் இறுதியில் தமிழ்லட்சுமி – தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்காத தமிழ் நாட்டு நாடகம்போல், அந்த வலைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது பரிதாபம்!

தமிழ்லட்சுமி – நாம் லட்சுமிகரமாக திலகமிடுவதற்குப் பதிலாக, தனது அழகான முகத்தில் தனக்குத்தானே கரும்புள்ளி குத்திக்கொண்ட நாடகம் என்பதுதான் வருத்தம் தரும் உண்மையாகும்.

இனிமேலாவது இதுபோன்ற வக்கிரபுத்தி கதாபாத்திரங்களை உருவாக்கி, குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தாமல், வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்தி மேன்மையான நாடகப் படைப்புகளை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

விக்னேஸ்வரி சாம்பசிவம்
தலைநகர்   

(இந்தக் கண்ணோட்டக் கட்டுரையின் கருத்துகள் யாவும் வாசகரின் சொந்தக் கருத்துகளாகும். இவை செல்லியலின் கருத்துகளோ, பிரதபலிப்புகளோ அல்ல. வாசகரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது)