பெய்ஜிங், ஆகஸ்ட் 11 – திபெத்தின் லாஸா நகருக்கு சுற்றுலா சென்ற சீனப் பயணிகளின் பேருந்து மலைமுகட்டில் இருந்து கவிழ்ந்து விழுந்ததில், சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் அன்ஹூய், ஷங்காய், ஷாண்டாங் மற்றும் ஹெபாய் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் கடந்த வெள்ளிக்கிழமை சீனாவிடமிருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற திபெத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அங்கு பிரபல சுற்றுலாப் பகுதியான லாஸா நகரின் அருகில் உள்ள நெய்மோ பகுதியின் மலைமுகட்டில் பேருந்து பயணிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வாகனங்களுடன் மோதியது.
மோதிய வேகத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைமுகட்டில் இருந்து சுமார் 10 மீட்டர் ஆழத்தில் உள்ள பள்ளத்தின் வழியே கீழே உருண்டு கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள், எதிரே வந்த வாகனங்களில் பயணித்தவர்கள் என 44 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து சீன அரசு, திபெத்திடம் முறையான விளக்கங்களை கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன.