அங்காரா,ஆகஸ்ட் 11 – உலகின் முற்போக்கு முஸ்லீம் நாடுகளில் ஒன்றான துருக்கியில் நேற்று நடைபெற்ற முதல் அதிபர் தேர்தலில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அங்கு பிரதமர் பொறுப்பில் இருந்த ரெசெப் தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார்.
துருக்கிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எர்டோகன் தனது மனைவி எமினியுடன் ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் காட்சி
இதுநாள் வரையில் அலங்காரப் பதவியாக இருந்து வந்த துருக்கிய அதிபர் பதவி தற்போது பொதுமக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மிக்க பதவியாக மாற்றப்பட அந்த நாட்டில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட 97.9 சதவீத வாக்குகளின் அடிப்படையில் 52.1 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று எர்டோகன் அதிபராக வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் நீதித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 1923ஆம் ஆண்டில் மதச்சார்பற்ற குடியரசாக நிறுவப்பட்ட துருக்கி எர்டோகனின் தலைமையின் கீழ் வட ஆப்பிரிக்க வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது.
ஐரோப்பாவுடன் பல அம்சங்களில் மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட துருக்கி, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணையும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றது.
முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட, 60 வயதான எர்டோகனின் அதிபர் தேர்தல் வெற்றியின் மூலம் துருக்கி புதிய சிந்தனைகளைக் கொண்ட அனைத்துலக அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்து பொருளாதார ரீதியாக வெற்றி நடைபோடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படங்கள்: EPA