Home நாடு ரஷ்யா மீது ஜெர்மனியும் விரைவில் பொருளாதாரத் தடை – மந்தமாகும் உலகப் பொருளாதாரம்!

ரஷ்யா மீது ஜெர்மனியும் விரைவில் பொருளாதாரத் தடை – மந்தமாகும் உலகப் பொருளாதாரம்!

598
0
SHARE
Ad

Russiaபெர்லின், ஆகஸ்ட் 14 – உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி வரும் செயல் தொடர்ந்தால் ரஷ்யாவுடனான பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உட்பட அனைத்து மேம்பட்ட உறவுகளிலும் தடை ஏற்படும் என ஜெர்மனியின் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் இரு நாடுகளும் கடும் பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளான மேற்கத்திய நாடுகளின் சரிவு அனைத்து நாடுகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கி உள்ளது.

உலக பங்கு வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு என அனைத்து வர்த்தக நிலைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி அரசு, ரஷ்யா மீது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது பற்றி ஜெர்மனியின் அதிபர் ஏஞ்செலா மெர்கல் கூறியுள்ளதாவது:

“ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உத்தரவுகளையும் மீறி ரஷ்யாவுடனான தொடர்புகளை நீட்டித்திருப்பதில் ஜெர்மனி கடுமையாகப் போராடி வருகின்றது. ஆனால் இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு ஒரு சாரார் மட்டுமே பொறுப்பாக முடியாது. ரஷ்யா அதிபர் புதினும் ஐரோப்பிய வட்டாரங்களின் இறையாண்மையை மதிக்கவேண்டும்”

“சர்வதேச அளவில் வகுத்துள்ள சட்டங்களை மீறும் இதுபோன்ற செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பல ஆண்டுகளாக அமைதியாகவும், செழிப்புடனும் வாழும் நாடுகளுக்கு வர்த்தகம், இறையாண்மை மற்றும் பொருளாதார ரீதியா பெரும் ஆபத்து ஏற்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவுடனான ஜெர்மனியின் வர்த்தக உறவுகள் கடந்த வருடம் மட்டும் 90 பில்லியன் யூரோக்களைத் தாண்டி உள்ளது. இதனை உணர்ந்துள்ள ஜெர்மனி, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை உடனடியாக செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் எம்எச்17 விமானம் ரஷ்யப் போராளிளால் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் ஜெர்மனிக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி உள்ளன.

மேற்கத்திய நாடுகள் ஒவ்வொன்றாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை செயல்படுத்தி வருவதால் உலகப் பொருளாதாரம் தேக்க நிலையை எட்டி உள்ளது. எனினும் ஆசிய சந்தைகளுக்கு இதனால் பெரிய அளவில் பாதிப்பில்லை என வர்த்தக நிபுணர்களால் கூறப்படுகின்றது.