சென்னை, ஆகஸ்ட் 16 – நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். இதனை டுவிட்டரில் கூறியுள்ள தனுஷ் தனது மகிழ்ச்சியையும், நன்றியையும், ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தனுஷ் தயாரித்து நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சுரபி மற்றும் அமித்தேஷ் பிரதான் ஆகியோர் நடித்துள்ளனர்.
வேலையில்லாமல் சுற்றி திரியும் பொறியியல் பட்டதாரி நாயகன் அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து தனது பணியில் எவ்வாறு வெற்றி பெறுகிறான் என்பது கதை.
இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்த படத்தின் கதை கல்லூரி மாணவர்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது இயல்பான நடிப்பின் மூலம் பொறியியல் படிப்பிற்கு பின் உள்ள வாழ்க்கையை காட்டியுள்ளார். இந்த படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 20 கோடி வசூலித்தது.
நடிகர் தனுஷ் நடிப்பில் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படமாகவும் இது உள்ளது. ‘வேலையில்லா பட்டதாரி’ படம் இதுவரை ரூ.50 கோடி வசூலித்துள்ளதாக தனுஷ் கூறியுள்ளார்.
உலக அளவில் திரையரங்குகளில் இந்தப் படம் வெற்றி நடை போடுகிறது என்று டுவிட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ். ‘ஆடுகளம்’ படம் தனுஷிற்கு தேசிய விருதை பெற்று தந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற்று தரவில்லை.
இதனையடுத்து அமைந்த படங்கள் அனைத்துமே தோல்வி படங்கள்தான். எனவே தனுஷிற்கு முக்கியமான வெற்றி படமாக ‘வேலையில்லா பட்டதாரி’ படம் அமைந்துள்ளது.