கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 – இந்த ஆகஸ்ட் மாதத்தோடு முடிவுக்கு வரும் டத்தோ வி.சுப்ரமணியம் (பாராட் மணியம்), மஇகா மகளிர் பகுதியின் தேசியத் துணைத் தலைவி சிவபாக்கியம் ஆகிய இருவரது செனட்டர் பதவிகளையும், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து நியமனம் செய்துள்ளார்.
செனட்டர் பதவியின் ஒரு தவணை என்பது மூன்றாண்டுகளைக் கொண்டதாகும். பழனிவேல் தேசியத் தலைவராகப் பதவியேற்றது முதல் அனைத்து செனட்டர்களும் ஒரு தவணைக்கு மட்டுமே இதுவரை நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
இப்போதுதான் முதன் முறையாக பாராட் மணியம், சிவபாக்கியம் ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் செனட்டர் பதவிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
பாராட் மணியம் மத்திய செயலவை உறுப்பினராக பழனிவேலுவால் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். அவர் மஇகா பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதியின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார்.
சிவபாக்கியம் மஇகா மகளிர் பகுதியின் தேசியத் துணைத் தலைவியாகவும், மஇகா பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதியின் மகளிர் பகுதித் தலைவியாகவும் சேவையாற்றி வருகின்றார்.
மஇகாவின் அடுத்த செனட்டர் பதவி எதிர்வரும் நவம்பரில் காலியாகின்றது. மஇகாவின் முன்னாள் பொருளாளர் ஜஸ்பால் சிங் தற்போது அந்தப் பதவியை வகித்து வருகின்றார்.
அவருக்கும் இதுபோன்றே மேலும் ஒரு தவணைக்கு செனட்டர் பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது.