கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – பிகேஆர் கட்சியின் உதவுத் தலைவரும், வழக்கறிஞருமான என்.சுரேந்திரன், 5000 வெள்ளி அபராத பிணையில் ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார்.
இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட தேசநிந்தனை குற்றச்சாட்டை மறுத்து என்.சுரேந்திரன் தீர விசாரணை செய்யக் கோரினார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது சுமத்தப்பட்ட ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு பொய்யானது என கடந்த ஏப்ரல் 14-ம் தேதி சுரேந்திரன் கூறியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அன்வார் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவராக சுரேந்திரன் இருந்தார்.
சுரேந்திரன் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 5000 வெள்ளியும், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம். அரசு தரப்பு வழக்கறிஞராக வாதிட்ட டிபிபி பைஸால் சைட் அமின் பிணை (ஜாமீன்) தொகையை 10,000 வெள்ளியாக நிர்ணயிக்கும்படி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
ஆனால், என்.சுரேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலும் அவர் ஒரு வழக்கறிஞர் என்பதாலும் குறைந்த தொகையை பிணை (ஜாமீன்) தொகையாக விதிக்கும்படி அவரது வழக்கறிஞர்களான எம். புரவலன், லத்தீபா கோயா நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து என்.சுரேந்திரன் 5000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.