பாக்தாத், ஆகஸ்ட் 21 – ஈராக்கின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகம் இருப்பதை கண்டிக்கும் விதமாக, இஸ்லாமியத் தீவிரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரின் தலையை துண்டித்துக் கொல்வது போன்ற கொடூரமான காணொளிக்காட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் ஃபோலே, சிரியாவில் அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் ஈராக் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யூடியூப் மற்றும் அல் புர்கான் மீடியா ஆகிய இணைய தளங்களில் ஒரு காணொளிக் காட்சி ஒன்றினை ஒளிபரப்பி உள்ளனர். அந்த காணொளியில் ஃபோலே தீவிரவாதி ஒருவனால் கொடூரமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா, தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்வதற்காகவே இந்தப் படுகொலையை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
உலக நாடுகளுக்கு இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.