இலண்டன், ஆகஸ்ட் 24 – உலகிலேயே சூழியல் முறைப்படி (Eco friendly) கட்டப்பட்ட முதல் இந்து ஆலயம் என நம்பப்படும் ஸ்ரீ சுவாமி நாராயணன் ஆலயம் இலண்டனில் உள்ள கிங்ஸ்பரி என்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
இலண்டனின் வடமேற்குப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் ஆலயம் 20 மில்லியன் பவுண்ட் செலவில் (சுமார் 110 மில்லியன் மலேசிய ரிங்கிட்) கட்டப்பட்டிருக்கின்றது.
இந்து ஆகம முறைப்படியும், பாரம்பரிய இந்து ஆலயக் கட்டிட வடிவமைப்பிலும் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கும் அதே வேளையில், பசுமைத் தொழில் நுட்ப அம்சங்களையும் (green technology) கொண்டிருக்கின்றது.
சூரிய ஒளியின் மூலம் சூரிய சக்தியைப் (solar energy) பெற்று சேமித்து வைக்கும் சூரிய சக்தி தகடுகளையும் (solar panels) கூரைகளின் வழியாக மழைநீரை சேமிக்கும் தொழில் நுட்பத்தையும் இந்த ஆலயம் கொண்டிருக்கும்.
தலைப்பாகை, கையில் ருத்திராட்சக் கட்டு, நெற்றியில் குங்குமப் பொட்டு, கழுத்தில் மாலை – என வித்தியாச கோலத்தில் இலண்டன் மாநகரத் தலைவர் போரிஸ் ஜோன்சன் – கிங்ஸ்பரி இந்து ஆலய திறப்பு விழாவில் – அருகில் சுவாமிஸ்ரீ மகராஜ்….
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த ஆலயம் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. ஆலயத்தின் திறப்பு விழா நிகழ்வுக்கு உலக ஆன்மீகத் தலைவரான ஆச்சார்ய சுவாமிஸ்ரீ மகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.
திறப்பு விழாவில், இந்து முறைப்படி தலைப்பாகை அணிந்து, சிவப்பு நிற குங்குமம் நெற்றியில் இட்டு, இலண்டன் மாநகரின் தலைவர் (London Mayor) போரிஸ் ஜோன்சன் இந்த ஆலயத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஆலயத்தின் கட்டிட சிறப்பியல்புகளும், வசதிகளும், கவனத்தை ஈர்ப்பதாகவும், அதிசயிக்கத்தக்க வகையிலும் அமைந்திருப்பதாக ஜோன்சன் பாராட்டினார்.
புதிய ஆலயத்தின் திறப்பு விழா ஆறு நாட்களுக்கான விழாவாகத் தொடர்ந்து கொண்டாடப்பட்டது.