Home இந்தியா இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு – தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து மோடி வலியுறுத்து!

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு – தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து மோடி வலியுறுத்து!

421
0
SHARE
Ad

Narendra-Modiபுதுடில்லி, ஆகஸ்ட் 24 – இந்தியாவிற்கு வருகை மேற்கொண்டிருக்கும் இலங்கையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஒருங்கிணைந்த இலங்கை என்ற வரையறைக்குள் தமிழர்கள் சம உரிமை, சுயமரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ அந்நாட்டு அரசு, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

தன்னைச் சந்தித்த இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் மோடி இவ்வாறு கூறியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

மூன்று நாள் பயணமாக டில்லி வந்த இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் பிரதமர் மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.

இலங்கை அரசு அரசியல் தீர்வு காண வேண்டும்

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடியின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு, நிவாரணம் போன்ற பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும். குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய அரசு சார்பில் கட்டப்படும் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் பிரதமர் உறுதியளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர், “ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, சுயமரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ அந்நாட்டு அரசு அரசியல் தீர்வு காண வேண்டியது அவசியம்” என்றும் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் டில்லிக்கு வர வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தில்லியில் தன்னைச் சந்தித்த இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மூலம் இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.

மோடியின் இந்த நடவடிக்கைகள், இந்தியா – இலங்கை நல்லுறவில் இதுவரை நிலவி வந்த இரு தரப்பு அரசு ரீதியிலான உறவுகளைக் கடந்து, தமிழ் மக்களின் உணர்வுகளை நேரடியாக அறிந்து கொள்ளவும், தமிழர் தலைவர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் காட்டும் அக்கறையையும், முயற்சிகளையும் வெளிப்படுத்துவதாக அமைவதாக இலங்கையின் தமிழர் தலைவர்கள் கருதுகின்றனர்.