புதுடெல்லி, ஆகஸ்ட் 25 – தென் கொரியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டுக் கார்கள் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், இந்திய சந்தைகளை முழுவதுமாக ஆக்கிரமிக்க புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன் படி, இந்தியாவில் தனது இரண்டாவது கார்கள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்திய அளவில் மிகப் பெரும் வர்த்தகத்தை கொண்டுள்ள ஹூண்டாய்க்கு சமீபத்திய வருடங்கள் சரிவைத் தர துவங்கியுள்ளன. அதற்கு முக்கிய காரணம் ஹோண்டா, ஃபோர்டு மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் அசுர வளர்ச்சி ஆகும்.
இந்நிலையில், புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர, இந்த புதிய தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை வகுத்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு சுமார் 6.8 லட்சம் கார்கள் உற்பத்தியாகின்றன.
இதனை இந்த ஆண்டு இறுதிக்குள் 7 லட்சமாக உயர்த்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் உயர்அதிகாரிகள் கூறியதாவது:-
“ஐரோப்பிய நாடுகளுக்கு ஹூண்டாய் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய இந்தியா பெரும் உதவியாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்திய சந்தையை மேலும் வலுப்படுத்தவும், உற்பத்தியை பெருக்கவும் இங்கு இரண்டாவது தொழிற்சாலையை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றோம்” என்று கூறியுள்ளனர்.