சென்னை, ஆகஸ்ட் 25 – காசோலை (செக்) மோசடி வழக்கில் இயக்குநர் சரண் கைது செய்யப்பட்டதற்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, பார்த்தேன் ரசித்தேன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களை இயக்கிய சரணை படப்பிடிப்பு தளத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பின்னர், நீதிமன்றத்தில் நிருத்தப்படுத்தப்பட்டு பிணை மனுவில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகிய சரண், திருநெல்வேலியில் ‘ஆயிரத்தில் இருவர்’ படப்பிடிப்பில் இருக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சிவகாசி சபையர் லித்தோ உரிமையாளர்களில் ஒருவரான ஞானசேகரின் பொய்யான தகவலின் அடிப்படையில் புனையப்பட்ட வழக்கில் இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு மேலான இந்திய திரைப்பட வரலாற்றில், தயாரிப்பாளர், இயக்குனர் ஒருவர் படப்பிடிப்பு தளத்திலேயே கைது செய்யப்பட்ட வருத்தமான நிகழ்வு இதுவே முதல்முறையாகும்.
அதுவும், எங்கள் திரைப்படத்துறையைச் சார்ந்த சபையர் லித்தோ பிரஸ் உரிமையாளர்களில் ஒருவரால் இந்த அவமானச் செயல் தொடங்கப்பட்டிருப்பது வருந்தத்தக்க, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கொண்ட இயக்குனர் சரண் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களையும் தயாரித்துள்ளார். எல்லோருடனும் நட்பாக பழகக்கூடிய நல்ல நண்பர்.
அவர், நம்பிக்கையின் பேரில் வழங்கிய காசோலையை தர வேண்டிய பாக்கித் தொகையை விட பல மடங்கு கூடுதலாக உயர்த்தி நிரப்பி, தன் தவறான வழிக்கு சட்டத்தையும் உடந்தையாக்கி கொண்டு, சிவகாசி சபையர் லித்தோ ஞானசேகரினின் இந்த அத்து மீறிய செயல் தமிழக திரைப்படைத்துறையினர் நெஞ்சில் தீராத காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், காசோலையில் உண்மையாக கொடுக்கப்பட வேண்டிய பாக்கித் தொகையை விட ஞானசேகரன் பலமடங்கு தொகையை உயர்த்தி நிரப்பிக் கொண்டது, தமிழ்த்திரைப்படத் துறையின் அஸ்திவாரமான தொழில் நம்பகத் தன்மையை சீர்குலைப்பதாக உள்ளது.
இந்த முறையற்ற செயலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த திரைப்படத்துரையிலேயே வளர்ந்து, அந்த திரைப்படத் துறையையே அழிக்க நினைக்கும் சிவகாசி சபையர் லித்துா பிரஸ்சுடன் தயாரிப்பாளர்கள் தொழில் உறவு கொள்ளுமுன், தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.
இந்த நிறுவனத்துக்கு வேறு யாருக்காவது பாக்கி வைத்திருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தெரிவிக்குமாறு டி.சிவா கேட்டுக் கொண்டார்.