கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 – கோலாலம்பூரில் இருந்து பாரீஸ் சென்ற எம்எச்20 விமானத்தில், மாஸ் விமானப் பணியாளர் ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து, 26 வயதான ஆஸ்திரேலிய பெண் பயணி நேற்று அந்நாட்டு தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
லௌரா புஷ்னி என்ற அந்த பெண், ஆஸ்திரேலியாவின் சேனல் 7 என்ற தொலைக்காட்சியில் நேற்று நேர்காணல் அளித்ததோடு, தான் படம் பிடித்து வைத்திருந்த காணொளியையும் வெளியிட்டார்.
(ஆஸ்திரேலியாவின் சேனல் 7 தொலைக்காட்சி நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்ட திரைநகல் – Screen shot)
முகமட் ரோஸ்லி (வயது 54) என்ற அந்த மாஸ் விமானப் பணியாளர், தன்னிடம் இரண்டு முறை தவறாக நடந்து கொண்டதாக லௌரா தெரிவித்தார்.
இருக்கை எண் 81 -ல் தனக்கு அருகில் வந்து அமர்ந்த அவர், தனது தொடையை பிடித்து விட்டதாகவும், பின்னர் தனது ஆடைக்குள் கையை நுழைத்தார் என்றும் லௌரா குற்றம் சாட்டியுள்ளார்.
விமானம் தரையிறங்குவதற்கு முன் தன்னிடம் வந்த முகமட் ரோஸ்லி, தனக்கு திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று தன்னிடம் மன்றாடியதாகவும் லௌரா தெரிவித்துள்ளார்.
“உங்களுக்கு மனைவி வீட்டில் இருக்கும் போது, எனது ஆடைக்குள் ஏன் கையை வைக்கிறீர்கள்? அதை ஏன் செய்தீர்கள்? இது ஒரு கற்பழிப்பு தான்” என்று நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அந்த பெண் கோபத்துடன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, லௌரா கொடுத்த புகாரை அடுத்து, தற்போது முகமட் ரோஸ்லி பிரான்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மலேசியாவின் தேசிய விமானப் பணியாளர்கள் சங்கம் (National Union of Flight Attendants Malaysia ) இந்த விவகாரத்தில் தலையிட்டு, முகமட் ரோஸ்லியின் குடும்பத்தினருக்கு உதவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.