கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – இந்த வருடத்தில் நடந்த இரு பேரிடர்களால் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் நிலை குலைந்து போயிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய பெண் பயணி ஒருவரிடம் விமானப் பணியாளர் தகாத முறையில் நடந்து கொண்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலியா நாட்டின் சேனல் செவென் என்ற ஊடகத்தில், ‘சண்டே நைட்’ என்ற நிகழ்ச்சியில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை அப்பெண் தைரியமாக முன்வந்து கூறியுள்ளார்.
லௌரா புஷ்னி என்ற 26 வயது பெண்ணான அவர், கடந்த ஆகஸ்ட் 4 -ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பாரீஸ் நகருக்கு செல்லும் எம்எச்20 விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது இந்தியப் பெருங்கடலுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது, எம்எச்370 விமான சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், தனக்கு மிகவும் பயமாக இருப்பதாக தலைமை விமானப் பணியாளரான முகமட் ரோஸ்லி பின் அபு கரிமிடம் (வயது 54) தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த விமானப் பணியாளர், லௌராவின் அருகே உட்கார்ந்ததோடு, அவரது ஆடைக்குள் கையை நுழைத்ததாக கூறப்படுகின்றது.
“என்னுடைய தொடையை தடவினார். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. உடனே விமானத்தை விட்டு இறங்கி விடவேண்டும் என்று தோன்றியது” என்று சேனல் செவென் செய்தியாளர்களிடம் லௌரா கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போது நீங்கள் ஏன் கத்தி கூச்சலிடவில்லை என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “நான் ஏன் கத்தவில்லை? நான் ஏன் கூச்சலிடவில்லை” என்று எனக்கு நானே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். நான் மிகவும் தைரியமான பெண் தான். என்னால் செய்திருக்க முடியும். ஆனால் அந்த நேரத்தில் பயத்தின் உச்சத்தில் இருந்த என்னால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று லௌரா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய திறன்பேசியில் வழியாக ரோஸ்லி செய்த பாலியல் துன்புறுத்தலை படம் பிடித்து வைத்திருப்பதாகவும், அதை வெளியிடப்போவதாகவும் லௌரா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 4 -ம் தேதி, எம்எச்20 விமானம் பாரீஸ் நகரை அடைந்ததும், உடனடியாக காவல்துறைக்கு சென்று லௌரா புகார் அளித்துள்ளார்.
இதனால், ரோஸ்லி அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டார். திருமணமானவரான ரோஸ்லிக்கு, 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த விவகாரத்தில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பும், மனநிறைவும் தான் தங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும், தங்களது விமானப் பணியாளர் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.