கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – பயணி ஒருவரிடம் தகாகத முறையில் நடந்து கொண்டதாக மலேசியா ஏர்லைன்ஸ் விமானப் பணியாளர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தால் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4 -ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில், இந்த சம்பவம் நடந்ததாக தங்கள் விமானப் பணியாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதை மாஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
“இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அதிகாரிகளுக்கு மலேசியா ஏர்லைன்ஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும். எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பும், திருப்தியான மனநிலையும் மிகவும் முக்கியம்” என்று மாஸ் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது, எம்எச்370 விமானத்தை நினைவு கூர்ந்த ஆஸ்திரேலிய பயணி தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போது அவருக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்து இருந்த விமானப் பணியாளர் பாலியல் ரீதியாக அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து அந்த பயணி பிரான்ஸ் நாட்டில் விமானம் தரையிறங்கியவுடன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விமானப் பணியாளர் கடந்த ஆகஸ்ட் 7 -ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.