மலேசியப் படமான ‘மைந்தன்’ சில நாட்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படம் நாளை வெளியாவதால், ‘மைந்தன்’ திரையிடப்பட்ட திரையரங்குகளை குறைத்து விட்டு ‘அஞ்சான்’ படத்தை வெளியிடுவது என்ன நியாயம் என கீதாஞ்சலி ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “மலேசியப் படம் என்றால் தரமாக இருக்காது, ரசிகர்கள் மலேசியப் படத்திற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் என பொதுவான கருத்து இருந்தது. ஆனால் இதையெல்லாம் முறியடித்தது ‘மைந்தன்’ படம். மைந்தன் படம் வெளியான முதல் 4 நாட்களில் 5-லட்சம் வெளியை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்திய படமான ‘அஞ்சான்’ வெளியாவதால், மைந்தன்’ படத்திற்கு திரையரங்குகளை குறைப்பது என்ன நியாயம்?” எனக் கேள்வி எழுப்பினார்.
“இதனால், இந்திய படங்களை புறக்கணியுங்கள் என்றோ, ஓரங்கட்டவோ நாங்கள் சொல்ல வில்லை. மலேசிய படங்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ‘வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி உடைந்த கதையாக’ மைந்தன் ஆகிவிடக்கூடாது” என மைஃபே எனப்படும் மலேசியக் கலைஞர்களுக்கான இயக்கத்தின் தலைவருமான டத்தோ கீதாஞ்சலி ஜி கேட்டுக்கொண்டார்.
(பின்குறிப்பு: மேற்கண்ட செய்தி தொடர்பான பத்திரிக்கை அறிக்கை எதனையும் நாம் டத்தோ கீதாஞ்சலியிடமிருந்து அதிகாரபூர்வமாகப் பெறவில்லை. இருப்பினும் ‘மைந்தன்’ படம் குறித்த தகவல்களை தொடர்ந்து நமது செல்லியலில் வழங்கி ஆதரவு தந்து வருகின்றோம் என்ற அடிப்படையிலும், கீதாஞ்சலி எழுப்பியுள்ள பிரச்சனை மலேசியக் கலையுலகம் குறித்த முக்கியமான ஒரு விவகாரம் என்பதாலும், அவரது முகநூல் பக்கத்தில் வெளிவந்துள்ள அவரது பத்திரிக்கை அறிக்கைகளிலிருந்து தொகுத்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளோம்)