கோலாலம்பூர் – பொன்சி மோசடியில் ஏமாந்துவிட்டதாகக் கூறி கிட்டத்தட்ட 3000 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை செந்தூலில் உள்ள அரங்கம் ஒன்றில் ஒன்று கூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இம்மோசடியை முன்னாள் தொலைக்காட்சிப் பிரபல பெண்மணி, அவரது கணவர் மற்றும் மேலும் 5 பேர் செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் மஇகா பொருளாளர் டத்தோ ரமணன் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
“புகார் அளித்த பிறகு, குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த வழக்கில் எங்களை 6 வழக்கறிஞர்கள் வழி நடத்துவார்கள்” என்று ரமணன் கூறினார்.
பொன்சி மோசடியில் பாதிக்கப்பட்டிருப்பதாக இதுவரை 17,000 பேர் முன்வந்து கூறியிருப்பதாகவும், இத்திட்டத்தின் மூலம் 446 மில்லியன் ரிங்கிட் (100 மில்லியன் அமெரிக்க டாலர்) மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் ரமணன் தெரிவித்தார்.
மேலும், இம்மோசடி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முன்வந்து புகார் அளிக்குமாறு ரமணன் வலியுறுத்தினார்.