கோலாலம்பூர், நவம்பர் 14 – பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக பாரிஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விமானப் பணியாளரை வேலை நீக்கம் செய்து விட்டதாக மாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும், தொழிற்துறை விவகார இலாகா (ஐஆர்டி) கட்டுப்பாட்டில் இந்த வழக்கு இருப்பதால் மேல் விவரங்கள் எதுவும் கூற முடியாது என்று மாஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மாஸ் நிறுவனத்தில் 32 வருடங்களாகப் பணியாற்றி வரும் அந்த விமானப் பணியாளரின் கிள்ளான் வீட்டிற்கு, சம்பவம் நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு வேலை நீக்க கடிதத்தை மாஸ் அனுப்பியுள்ளது.
தன் மீது உள்ள நியாயத்தை 60 நாட்களுக்குள் அந்த விமானப் பணியாளர் எடுத்துரைத்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் மாஸ் அக்கடித்தத்தில் குறிப்பிட்டிருந்ததாக மலேசிய விமானப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் இஸ்மாயில் நசாருதீன் தெரிவித்துள்ளார்.
எனினும், பாரீஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பணியாளர், தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதே தெரியாது என்று கூறியுள்ளார்.
லௌரா புஷ்னி என்ற 26 வயது பெண், கடந்த ஆகஸ்ட் 4 -ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பாரீஸ் நகருக்கு செல்லும் எம்எச்20 விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது இந்தியப் பெருங்கடலுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது, எம்எச்370 விமான சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், தனக்கு மிகவும் பயமாக இருப்பதாக தலைமை விமானப் பணியாளரான முகமட் ரோஸ்லி பின் அபு கரிமிடம் (வயது 54) தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த விமானப் பணியாளர், லௌராவின் அருகே உட்கார்ந்ததோடு, அவரது ஆடைக்குள் கையை நுழைத்ததாக கூறப்படுகின்றது.