புதுடெல்லி, ஆகஸ்ட் 26 – இந்தியாவில் இன்று சியோமி நிறுவனத்தின் ‘ரெட்மி 1எஸ்’ (Redmi 1S) திறன்பேசிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனாவின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் ‘சியோமி’ (Xiaomi) நிறுவனம், மிகக் குறைந்த விலையில், ஆப்பிளுக்கு நிகரான தொழில்நுட்பங்களைக் கொண்ட திறன்பேசிகளை உருவாக்கி வருகின்றது. ஆசியாவின் முக்கிய சந்தைகளில் சிறந்த வர்த்தகத்தை பெற்றுவிட்ட இந்த நிறுவனம், இன்று தொடக்க நிலை திறன்பேசிகளான ரெட்மி 1எஸ்-ஐ இந்தியாவில் வெளியிட இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தது.
இந்தியாவில் திறன்பேசிகள் பற்றிய அறிவு பரவலாக பரவி இருந்தாலும், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட திறன்பேசிகள் இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில், சியாவுமி நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் 6,999 ரூபாய்களுக்கு புதிய ரெட்மி 1எஸ்-ஐ வெளியிடுகின்றது.
இதன் சிறப்பு அம்சங்களாக கூறப்படுவதாவது:-
“அண்டிரோய்டு 4.3 ‘ஜெல்லி பீன்’ (Jelly Bean) இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திறன்பேசிகள், அதிவேக திறனுக்காக 1.6GHz ‘குவால்கம் ஸ்நாப்டிராகன் 400 குவாட்கோர் செயலி’ (Qualcomm Snapdragon 400 quad-core processor)-ஐக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
“மேலும், இதன் உள்ளார்ந்த நினைவகம் 16ஜிபியாகவும், 64ஜிபி வரை சேமிப்பு அட்டைளுக்கான கொள்திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்புறத்தில் 1.6 மெகா பிக்சல் கேமராவும், பின்புறத்தில் 8 மெகா பிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டு இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்”
இதுவரை வெளிவந்துள்ள சியோமி தயாரிப்புகள் சிறந்த வர்த்தகத்தையே கொடுத்துள்ளன, இந்த ரெட்மி 1எஸ் திறன்பேசிகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.