கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், மறுசீரமைப்புப் பணிக்காக தொழிலாளர்களின் ஊதியம் குறைக்கப்படும் எனக் கூறப்படுவது ஏற்புடையதல்ல என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 5 மாதங்களில் நாட்டின் முன்னணி விமான நிறுவனமான மாஸ், இரு பெரும் பேரிடர்களை சந்தித்ததால் கடும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகி உள்ளது. எனினும், அந்நிறுவனத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திருப்ப அரசும், மாஸ் நிர்வாகமும் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், நிறுவனம் மீண்டு வரும் வரை தொழிலாளர்களின் ஊதியம் குறைக்கப்படும் என்ற கூற்று எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாஸ் நிறுவனத்தில் சமீபத்திய சிக்கல்கள் அனைவரும் அறிந்த ஒன்று. அதனை சரி செய்வதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அந்த பணிகளுக்காக ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்று கூறப்படுவது வெறும் வதந்தி” என்று கூறியுள்ளார்.
தற்போது உள்ள நிலையில் கசானா நேசனல்ஸ் நிறுவனத்தின் சலுகைகள் மற்றும் யுக்திகளை சிறிய பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாஸ் நிறுவனம், மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வர்த்தக நோக்கர்கள் கூறுகின்றனர்.