ஆகஸ்ட் 28 – ஏஎல்எஸ் (ALS) எனப்படும் நோய் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விளையாட்டாகத் தொடங்கப்பட்ட ஐஸ் கட்டிக குளியல் உலகெங்கும் பிரபலங்களிடையே பரவி, முகநூல் பக்கங்களில் அளவுக்கதிகமான ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இதன் மூலம் ஏஎல்எஸ் நோய் மீதான அனைத்துல சங்கம் நேற்று ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை 31.5 மில்லியன் அமெரிக்க வெள்ளியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
ஆனால், இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிய இந்த அமைப்பு 2.1 மில்லியன் அமெரிக்க வெள்ளியை மட்டுமே நன்கொடையாகப் பெற்றிருந்தது.
இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் வாளியில் இருக்கும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு குளியல் போட்டுவிட்டு குறைந்த பட்சம் 100 வெள்ளி நன்கொடை வழங்க வேண்டும். அதன்பின்னர், இந்த ஐஸ் கட்டி குளியல் செய்யுங்கள் என மூன்று பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை சவாலுக்கு அழைக்க வேண்டும்.
இந்த ஐஸ் கட்சி சவால், தற்போது உலகெங்கும் பிரபலங்களிடையே பரவத் தொடங்கி விட்டது. பிரபலங்களின் ஐஸ் குளியல் முகநூல் பக்கங்களிலும், யூ டியூப் போன்ற காணொளி இணையத் தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
விரைவாகப் பரவி வரும் ஐஸ் கட்சி குளியல் சவால்களால், ஏஎல்எஸ் நோய் அனைத்துல அமைப்புக்கு மேலும் கூடுதலான நன்கொடைகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் அண்மையில் ஒரு சிலர் இந்த ஐஸ் கட்டி குளியலுக்கு பதிலாக ஏழைகளுக்கு ஒரு வாளி நிறைய அரிசி வழங்கும் சவாலை ஆரம்பித்துள்ளனர்.