டெல்லி, ஆகஸ்ட் 28 – ஏர் இந்தியா தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் அறிவித்த சலுகை விலையிலான 100-ரூபாய் பயணச் சீட்டை பெற மக்கள் முந்தியடித்ததால் அந்நிறுவனத்தின் இணையதளம் செயல் இழந்தது.
இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி ஒன்றாக்கப்பட்டன. இந்த 2 நிறுவனங்கள் ஒன்றான நாளை கொண்டாட ஏர் இந்தியா தினம் அறிவிக்கப்பட்டது.
இந்த தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.100-க்கு விமான பயணச் சீட்டை அளிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த 100 ரூபாய் பயணச் சீட்டை முன்பதிவு நேற்றில் இருந்து 5 நாட்களுக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த சலுகை விலையிலான பயணச் சீட்டை பெற பொது மக்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்றனர். இப்படி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முந்தியடித்ததால் ஏர் இந்தியா நிறுவன இணையதளம் செயல் இழந்தது.
இதனால் தற்போது பயணச் சீட்டை முன்பதிவு செய்ய ஏர் இந்தியா இணையதளத்திற்கு சென்றால், அசௌகரியத்திற்கு மன்னிக்கவும். நீங்கள் முயற்சி செய்யும் பக்கம் இல்லை என்று வருகிறது. இதனால் மக்கள் ரூ.100-க்கு பயணச் சீட்டை எடுக்க முடியாமல் போனதை நினைத்து கவலை அடைந்துள்ளனர்.