Home இந்தியா இலங்கை நாட்டினர் பங்கேற்பதால் ஆசிய தடகள போட்டிகளை நடத்த முடியாது- ஜெயலலிதா ஆவேசம்

இலங்கை நாட்டினர் பங்கேற்பதால் ஆசிய தடகள போட்டிகளை நடத்த முடியாது- ஜெயலலிதா ஆவேசம்

511
0
SHARE
Ad

jeyaசென்னை, பிப்.22- இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க இருப்பதால், வரும் ஜூலையில் திட்டமிடப்பட்டிருந்த ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வேறு எங்கேனும் நடத்திக் கொள்ள ஆசிய தடகளக் கழகம் கேட்டுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு:-

விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்க முனைப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை சென்னையில் வரும் ஜூலையில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், இலங்கை வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும், கௌரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.

இலங்கையில் உச்சகட்டப் போர் நடந்தபோது, சர்வதேச போர் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இப்போது, இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது மட்டுமல்லாது, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகம் உள்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளேன். மேலும், இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள கடந்த ஆண்டு தமிழகம் வந்தனர்.

அப்போது அவர்களுக்கு தமிழகம் வர அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நான் தெரிவித்தேன். இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்தப் போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என உத்தரவிட்டேன்.

இந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும், தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசுகையில், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் மீண்டும் வலியுறுத்தினேன்.

இலங்கையில் இனப் படுகொலை:

இந்த நிலையில், பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளிய கோரக் காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது மன்னிக்க முடியாத போர்க் குற்றமாகும். இது என்னுடைய மனதை மிகவும் நெகிழ வைத்துள்ளது.

இதே போன்று, இன்னும் பல தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களும் வெளிவந்துள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, ஜெர்மனியில் ஹிட்லர் நிகழ்த்திய இனப்படுகொலையை விஞ்சும் அளவுக்கு இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றிருப்பது தெரிய வருகிறது.

இலங்கை அரசு இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் ஜூலையில் சென்னையில் நடைபெறவிருக்கும் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்து விடும்.

இதனால், இலங்கை வீரர்கள் 20-வது ஆசியத் தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது எனவும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்குமாறும் சிங்கப்பூரிலுள்ள ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இது நாள் வரை ஆசிய தடகளக் கழகத்திடம் இருந்து எந்தவித பதிலும், தகவலும் தமிழக அரசுக்குக் கிடைக்கப் பெறவில்லை.

ஆசிய தடகளக் கழகத்திடம் இருந்து எந்தவித சாதகமான பதிலும் வராத சூழ்நிலையில், இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது என்பதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. தமிழர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எனவே, இந்த ஆண்டு ஜூலையில் நடைபெறவுள்ள தடகளப் போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்பட மாட்டாது என்பதையும், இந்தப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால் வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகளக் கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.