பாக்தாத், செப்டம்பர் 3 – ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம், பிணையக் கைதியாக உள்ள மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரை படுகொலை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கில் தனியாட்சி கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் சதாம் உசேன் ஆதரவு படையான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் அங்கு தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றது. அவர்களை ஒடுக்க அமெரிக்கா, குர்திஷ் படையினருடன் சேர்ந்து எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், ஏற்கனவே பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர்களான ஜேம்ஸ் ஃபோலே மற்றும் ஸ்டீவன் ஸ்காட்லாப் ஆகியோரில் ஃபோலேவின் தலையை சமீபத்தில் துண்டித்து கொன்றனர்.
அமெரிக்காவின் செயல் மீண்டும் தொடருமானால் ஸ்காட்லாப் தலையும் துண்டிக்கப்படும் என்று மிரட்டியிருந்தனர். இந்நிலையில் ஸ்காட்லாப் தலையும் துண்டித்து கொல்லப்படும் காணொளி தற்போது இணையத் தளத்தில் உலா வரத்தொடங்கி உள்ளது.
எனினும் இது பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.
குறிப்பிட்ட அந்த காணொளியில் ஏற்கனவே ஃபோலேவின் தலையை துண்டித்த தீவிரவாதி இம்முறை ஸ்காட்லாப்புடன் மீண்டும் காட்சியளித்துள்ளான். அந்த பதிவில், “என்னை மீண்டும் வரச் செய்துள்ளீர்கள் ஒபாமா. எங்களுடைய எச்சரிக்கையையும் மீறி உங்களுடைய அதிகாரத்தை இஸ்லாமிய நாட்டின் மீது பயன்படுத்துகிறீர்கள்” என்று அந்த தீவிரவாதி கூறியுள்ளான்.
இந்த பதிவு போலியானது என ஒரு சாராரும், ஃபோலே போன்று ஸ்காட்லாப் கொல்லப்பட்டுவிட்டார் என ஒரு சாராரும் கூறி வருகின்றனர்.