புது டெல்லி, செப்டம்பர் 10 – பிரதமர் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி 29-ம் தேதி ஒபாமாவை சந்தித்து பேசுகிறார்.
நரேந்திர மோடி மே மாதம் 26-ம் தேதி பிரதமராக பதவி ஏற்ற பிறகு உலக நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பூடான், பிரேசில், நேபாளம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டார். அடுத்து அவர் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது.
ஏனெனில், குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடந்த இனக்கலவரங்களை, அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அடக்க தவறிவிட்டார் என குற்றம் சாட்டி, அவருடைய விசாவை அமெரிக்கா கடந்த 2005-ம் ஆண்டு ரத்து செய்து விட்டது.
அதன்பிறகு மோடி, அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில், பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து காட்சிகள் மாறின.
மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது தேர்தல் வெற்றிக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தார். அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை மோடியும் ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ராணுவ அமைச்சர் சக் ஹேகலும் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் செல்கிறார். முதலில் அவர் 26-ம் தேதி நியூயார்க் ஜான் எப். கென்னடி அனைத்துலக விமான நிலையம் சென்று இறங்குகிறார். மறுநாள் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை 29-ம் தேதி சந்திக்கிறார். இந்த சந்திப்பு மறுநாளும் தொடர்கிறது. மோடியும், ஒபாமாவும் தொடர்ந்து 2 நாட்கள் சந்தித்து பேசுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
மோடியின் இந்த பயணம், 9 ஆண்டுகளாக அவரை அமெரிக்கா புறக்கணித்து வந்ததை முடிவுக்கு கொண்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில்,
“வெள்ளை மாளிகையில் 29-ம் தேதியும், 30-ம் தேதியும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று, சந்திப்பதில் ஜனாதிபதி ஒபாமா ஆர்வமாக இருக்கிறார். இரு நாட்டு மக்களுக்கும், உலகுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம் கொண்டுள்ளார்” என்றார்.