இஸ்லாமாபாத், செப்டம்பர் 10 – பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று மசூதி ஒன்று இடிந்து விழுந்தத்தில் 24 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருவதால், பழமையான கட்டிடங்கள் உடைந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று லாகூரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள மசூதியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பகல் நேர தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
இரண்டடுக்கு மாடி கொண்ட அந்த மசூதியின், கூம்பு வடிவ கோபுரம் தொழுகையின் போது சரிந்து தளத்தின் மீது விழுந்தது. ஏற்கனவே கன மழையால் ஊறிப்போய் இருந்த மசூதியின் தளம், கோபுரம் விழுந்ததால் அதுவும் சேர்ந்து இடிந்து கீழே விழுந்தது.
இதில் மசூதியின் உள்ளே தொழுகை நடத்திக் கொண்டிருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
11 பேர் உயிருடன் மீட்கப் பட்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். எஞ்சியுள்ளோரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக மீட்புக் குழு அறிவித்துள்ளது.
மழையின் காரணமாக மசூதி இடிந்து விழுந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழமையான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள், தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.