கோலாலம்பூர், செப்டம்பர் 12 – பேஸ்புக் நிறுவனம் தனது புதிய வசதியான ‘ஸ்னாப்சேட்'(Snapchat)-ன் சோதனை முன்னோட்டத்தை தொடங்கியுள்ளது.
முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக், பயனர்களுக்கான பேஸ்புக் பக்கங்களில் புதிய வசதியை ஏற்படுத்தித் தருவதற்காக கடந்த சில மாதங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அந்நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்ய உள்ள ஸ்னாப்சேட் வசதி, பயனர்களுக்கான பதிவுகள் மற்றும் இடுகைகளில் (Postings) புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
இந்த ஸ்னாப்சேட் வசதியின் மூலம் பயனர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யும் பதிவுகள் மற்றும் இடுகைகளை குறிப்பிட்ட சில மணித்துளிகளுக்குப் பின்னர் அல்லது குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் தானாகவே அழிந்துவிடும் வகையில் அமைத்துக் கொள்ள முடியும். இந்த கால இடைவெளியினை பயனர்கள் தாங்கள் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.
இதற்கான சோதனை முன்னோட்டத்தை பேஸ்புக், குறிப்பிட சில பயனர்களை தேர்வு செய்து செயல்படுத்தி வருகின்றது. எனினும், இந்த புதிய வசதியானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே தற்சமயம் அறிமுகப்படுத்தப்படும் என ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில், பேஸ்புக் அதனை உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பயனர்களின் இடுகைகளை தன்னிச்சையாகவே அழிக்கும் தன்மை கொண்ட இந்த புதிய வசதியின் சோதனை முன்னோட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. அதன் சாதக பாதக அம்சங்களை ஆய்வு செய்த பின்னர் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த புதிய வசதியின் மூலம் பயனர்களின் இடுகைகள் குறிப்பிட்ட கால அளவுகளுக்கு பின் தானாகவே மறையும் என்று கூறப்பட்டாலும், பேஸ்புக் சேவையகங்களில் (சர்வர்களில்) (server) குறைந்தபட்சம் 90 நாட்களாவது வைத்திருக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகைப்படங்களுக்கான ஸ்லிங்ஷாட் செயலியை அறிமுகப்படுத்திய பேஸ்புக், தற்போது இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.