ஆஸ்திரேலியாவில் அண்மையில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. ஊடகங்களின் செய்திகளை வெளியிடும் பேஸ்புக், கூகுள் போன்ற மிகப் பெரிய வணிக சமூக ஊடக நிறுவனங்கள் இனி அத்தகைய செய்திகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.
அந்த சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த வாரத்தில் செனட் எனப்படும் மேலவையில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தை எதிர்த்து பேஸ்புக் தனது பகிர்வுகளை ஆஸ்திரேலிய பயனர்கள் பார்க்க முடியாதவாறு தடை செய்துள்ளது.
இதனால் பல அரசியல்வாதிகள், அறவாரிய நிறுவனங்கள், தீயணைப்பு நிலையங்கள் போன்றவற்றின் பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டு சேவைகள் தடை கண்டிருக்கின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கொண்டுவரும் சட்டங்களை மதிக்காமல் பேஸ்புக் செயல்படுவதும், தனது சேவைகளைத் தடை செய்வதும் அதன் ஆதிக்கத்தைக் காட்டுவதாகப் பலரும் சாடியுள்ளனர்.
பல நாட்டு தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேஸ்புக் முடிவுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.
அதே வேளையில் இந்த சட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் மற்றொரு சமூக ஊடக நிறுவனமான கூகுள் உலக அளவில் 500-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களிடம் அவர்களின் செய்திகளைப் பகிர்வதற்காக கட்டணம் செலுத்த ஒப்புக் கொண்டு அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது.
இதற்கிடையில் இதுகுறித்துக் கருத்துரைத்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோரிசன் இந்த விவகாரத்தில் தான் பின்வாங்கப் போவதில்லை என சூளுரைத்துள்ளார்.