புதுடெல்லி, செப்டம்பர் 12 – ‘‘விவேகானந்தரின் உலக சகோதரத்துவக் கொள்கை பின்பற்றப்பட்டிருந்தால், அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் வரலாற்றில் இடம் பெற்றிருக்காது’’ என டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுர கட்டிடத்தை அல்-கய்தா தீவிரவாதிகள் தகர்த்த தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் மோடி தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியிருப்பதாவது, “செப்டம்பர் 11-ம் தேதியை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த பேரழிவு. மற்றொன்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893-ம் ஆண்டு நடந்த உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய ஆன்மாவை சிலிர்க்கவைக்கும் உரை.
அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே எனக் கூறி இந்தியாவின் சகோதரத்துவக் கொள்கையை வெளிப்படுத்தினார். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தனது உரையில் விவேகானந்தர், ‘‘இந்த அழகான பூமியை பிரிவினை, மதவெறி போன்றவை ஆட்கொண்டுள்ளது. அது வன்முறையை பரப்பி, பூமியை ரத்தத்தால் நனையவிட்டது, நாகரீகத்தை அழித்துவிட்டது, உலக நாடுகளை நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டது.
இது போன்ற தீய சக்திகள் இல்லாமல் இருந்திருந்தால், மனித சமுதாயம் இப்போது இருப்பதைவிட மேம்பட்டிருக்கும். மதவெறிக்கு சாவு மணி அடிக்க வேண்டிய நேரம் இந்த மாநாடு மூலம் வந்துவிட்டது’’ என கூறினார்.
அவரது சகோதரத்துவ கொள்கை பின்பற்றப்பட்டிருந்தால், அமெரிக்காவின் செப்.11 தாக்குதல் சம்பவம் உலக வரலாற்றில் இடம் பெற்றிருக்காது.
விவேகானந்தரின் வார்த்தைகளை நாம் நினைவு கூறி ஒற்றுமை, சகோதரத்துவம், உலக அமைதிக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.