மும்பை, செப்டம்பர் 12 – முஸ்லீம்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் சல்மான் கான். அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.
அது குறித்து கேட்டால் ஒன்று மவுனம் காப்பார், இல்லை என்றால் கோபத்தில் பொறிந்து தள்ளிவிடுவார். இந்நிலையில் தான் அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
சல்மான் ‘பீயிங் ஹ்யூமன்’ என்ற என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். அந்த அமைப்பு சார்பில் அண்மையில் மும்பையில் அலங்கார அணிவகுப்பு (ஃபேஷன் ஷோ) நடைபெற்றது.
அந்த அணிவகுப்பில் மாடல் ஒருவர் அரபு மொழியில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் அணிந்து ராம்ப் வாக் செய்தார். பீயிங் ஹ்யூமன் அலங்கார அணிவகுப்பை பார்த்த மும்பையைச் சேர்ந்த முகமது ஆசிம் முகமது ஆரிப் என்பவர் சல்மான் கான் மீது போலீசில் புகார் கொடுத்தார்.
ஆரிப் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “சல்மான் கானின் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ராம்ப் வாக் செய்த மாடலின் டி-சர்ட்டில் அரபு மொழியில் எழுதிய வாசகங்கள் இருந்தன.
இது முஸ்லீம் சமுதாயத்தினரின் மத நம்பிக்கையை காயப்படுத்துவதாக உள்ளது. அதனால் சல்மான் கான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.
ஆரிபின் புகாரின்பேரில் போலீசார் சல்மான் கான் மீது முஸ்லீம்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தியதாக இந்திய தண்டனை சட்டம் 295 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.