கோலாலம்பூர், செப்டம்பர் 17 – உலக அளவில் தமிழ் திரையுலகில் சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியவற்றில் தமிழக தயாரிப்புகளே உலகெங்கிலும் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த நிலை மாறி தற்போது தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தயாரிப்புகளும் உலக அளவில் மிகவும் விரும்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சிங்கப்பூரின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான சபீர் தபாரே மற்றும் குழந்தை நட்சத்திரம் சஞ்சலா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் “ஜனனி D/O மாதவன்” என்ற தொலைக்காட்சி நாடகம் தற்போது சிங்கப்பூரின் வசந்தம் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு அனைவராலும் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்த நாடகத்திற்கு ஜெயா ராதாகிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதி இயக்குநர் நாகராஜுடன் இணைந்து இந்த நாடகத்தை இயக்கியுள்ளார்.
மேலும், இந்த நாடகத்தில் மலேசியாவின் மிகச் சிறந்த நடிகையும், அழகும், சாந்தமும் கொண்டவரான ஜாஸ்மின் மைக்கேல், முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
தந்தை மற்றும் மகளுக்கிடையிலான தூய்மையான அன்பை சொல்லும் “ஜனனி d/o மாதவன்” என்ற அந்த நாடகத்தில், சபீர் “நிலா தூங்குது” என்ற ஒரு அற்புதமான பாடலுக்கு தானே இசையமைத்து, வரிகளும் எழுதி, பாடலையும் தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். இது அவரது 100 –வது பாடலாகும்.
தமிழகப் பாடல்களுக்கு இணையாக “நிலா தூங்குது” பாடலின் வரிகளும், இசையும், ஸ்வரங்களும் இசைப் பிரியர்களின் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
இதயத்தை வருடும் அந்த பாடல் அண்மையில் யூடியூப் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு பலராலும் விரும்பி கேட்கப்பட்டு வருகின்றது.
சபீர், ஜாஸ்மின் மற்றும் குழந்தை நட்சத்திரம் சஞ்சலா ஆகியோர் நடித்திருக்கும், பாடல் வரிகளுடன் கூடிய அந்த படக்காட்சிகள் ஒவ்வொன்றும் மனதை கொள்ளை கொள்கின்றது.
தந்தை, மகளுக்கு இடையிலான உறவை அற்புதமாக வெளிக்காட்டும் இந்த நாடகத்தில் சிங்கப்பூர் மீடியா கார்ப் நிறுவனத்தின் வசந்தம் தொலைக்காட்சியைச் சேர்ந்த பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சபீர் அண்மையில் இந்தியாவில் சோனி மியூசிக் வீடியோவுடன் இணைந்து “டவுன் பஸ்” என்ற புதிய ஆல்பம் ஒன்றையும் செய்யவுள்ளார். சோனியுடன் இணையும் சிங்கப்பூரில் முதல் இசையமைப்பாளர் சபீர் என்பது இதில் கூடுதல் சிறப்பாகும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்த ஆல்பத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது.
தனது 12 வயது முதல் பாடல் எழுதத் தொடங்கிய சபீர், இசையிலும் அதிக திறமையானவராக விளங்கினார். தற்போது சிங்கப்பூரில் சபீர் மியூசிக் அகாடமி என்ற நிறுவனத்தையும் மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வரும் சபீர். அதன் மூலம் பல இளம் பாடகர்களையும், இசையமைப்பாளர்களையும் உருவாக்கி வருகின்றார்.
மேலும், அண்மையில் வெளிவந்த தமிழகத்தின் வெற்றிப் படங்களான அரிமா நம்பி மற்றும் வத்திக்குச்சியில், யாரோ யார் அவள், அரி உன்னை ஆகிய பாடல்களையும் சபீர் பாடி தமிழகப் படங்களிலும் பிரபலமடைந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஃபீனிக்ஸ்தாசன்
“நிலா தூங்குது” என்ற அந்த அழகிய பாடல் உங்கள் பார்வைக்கு:-