புதுடெல்லி, செப்டம்பர் 19 – சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் டெல்லியில், பிரதமர் மோடி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் விவகாரம் கவலை அளிப்பதாக ஜின்பிங்கிடம், மோடி தெரிவித்தார்.
குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லிக்கு வந்தார். அவருக்கு அதிபர் மாளிகையில் நேற்று ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்களை ஜின்பிங்குக்கு, ஜனாதிபதி பிரணாப் அறிமுகம் செய்து வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜின் பிங் கூறியதாவது,
“நான் 3 இலக்குகளுடன் இந்தியா வந்துள்ளேன். எனது பயணத்தின் முதல் நோக்கமே இரு நாடுகள் இடையேயான நட்பை அதிகரிப்பதுதான். இந்தியா-சீனா இடையே ஆயிரம் ஆண்டு கால நட்பு உள்ளது. இரு நாட்டு நாகரீகங்களையும் நாம் மதித்து போற்றுகிறோம்.
நாம் ஒருவருக்கொருவர் அளித்த வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டும். உலக சந்தையில் சீனாவும், இந்தியாவும் முன்னணியில் உள்ளன. இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதுதான் எனது 2-வது இலக்கு.
அப்போதுதான் இருநாட்டு மக்களும் பயன் அடைய முடியும். இரு நாடுகளும் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள். எனவே அதற்கான வழிகளை இரு நாடுகள் சேர்ந்து பின்பற்ற வேண்டும். அதுதான் எனது 3-வது இலக்கு.
உலக அரங்கில் இந்தியாவும், சீனாவும் இரண்டு முக்கிய சக்திகள். அதனால் நமது உறவு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என ஜி ஜின்பிங் கூறினார்.
அதன்பின் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜின்பிங் அஞ்சலி செலுத்தினார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீன அதிபரை நேற்று சந்தித்தார்.
அதன்பின் ஐதராபாத் இல்லத்தில் மோடி-ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்துள்ள நிலையில் காஷ்மீரின் சுமர் பகுதியில் நேற்றும், நேற்று முன்தினமும், சுமார் 500 வீரர்களை சீன ராணுவம் அனுப்பியிருந்தது.
அதற்கு சம அளவில் இந்திய வீரர்களும் எல்லை பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இந்த ஊடுருவல் கவலை அளிப்பதாக ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
எல்லை வரையறுக்கப்படாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும், இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கும் இரு நாடுகளிடையேயும் வழிமுறைகள் உள்ளதாகவும் ஜின்பிங் தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்குப்பின் பேட்டியளித்த மோடி, ‘‘எல்லையில் நடந்த சம்பவங்கள் குறித்து சீன அதிபரிடம் எனது கவலையை தெரிவித்தேன்.
எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும். இதற்கு எல்லை கட்டுப்பாட்டு பகுதி வரையறுத்து விரைவில் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என ஜின்பிங்கிடம் வலியுறுத்தியுள்ளேன்.
எல்லையில் நிலவும் அமைதிதான், இரு நாடுகள் இடையேயான நம்பிக்கைக்கு அடித்தளமாக இருக்கும் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்’’ என்றார் மோடி.