கோலாலம்பூர், செப்டம்பர் 22 – 13-வது உலகத் தமிழ் இணைய மாநாடு கடந்த செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கி 20, 21 என மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மலேசியா உத்தமம் அமைப்பின் தலைவர் சிம இளந்தமிழ் தலைமையில், மலேசியாவில் இருந்து கல்வியாளர்கள், கட்டுரை படைப்பாளர்கள் என 56 பேர் கலந்து கொண்டனர்.
(மலேசிய உத்தமம் அமைப்பின் தலைவர் சிம.இளந்தமிழ்)
இது குறித்து உத்தமம் அமைப்பின் தலைவர் சிம இளந்தமிழ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உலக அளவில் வாழும் தமிழர்களுக்கு மலேசியா எப்போதும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றது. திறன்பேசிகள், ஐபேட்கள், கணினிகள், மின்னஞ்சல் மற்றும் தட்டைக்கணினிகள் ஆகியவற்றில் தமிழை புகுத்துவதிலும், பயன்படுத்துவதிலும் மலேசியா முக்கியப் பங்காற்றி வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
(இடது -வாசுதேவன் இலட்சுமணன், வலது -மேகவர்ணன் ஜெகதீசன்)
ஜோகூர் மாநிலம் தேசா ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி ஆசிரியரான வாசுதேவன் இலட்சுமணன், “தற்கால இலந்திரனியல் செல்நெறி – தட்டைக் கணினி வழி தமிழ் மின்னூல் உருவாக்கல்” என்ற தலைப்பிலும், பேராக் மாநிலம் பாகான் பாசிர், துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி ஆசிரியரான மேகவர்ணன் ஜெகதீசன், “எடுபுண்டு வழி தகவல் தொழில்நுட்பக் கல்வி – விண்டோசுடன் ஓர் ஒப்பீடு” என்ற தலைப்பிலும் கட்டுரை படைத்தனர்.
இந்த இணைய மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹாங் காங், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த இணைய மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது.