Home அவசியம் படிக்க வேண்டியவை மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றினைப் போற்றுகின்றேன் – புதுவை முதலமைச்சர் ந. அரங்கசாமி பேச்சு

மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றினைப் போற்றுகின்றேன் – புதுவை முதலமைச்சர் ந. அரங்கசாமி பேச்சு

530
0
SHARE
Ad

Pondichery CMபுதுச்சேரி, செப்டம்பர் 23 – புதுச்சேரியில் நடைபெற்ற 13 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொண்ட புதுச்சேரி முதலமைச்சர் ந. அரங்கசாமி அவர்கள் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றினைப் பாராட்டிப் பேசினார்.

புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு கடந்த செப்டம்பர் 19 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21 -ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகின் பல பகுதிகளிலிருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட பேராளர்கள் வருகை தந்தனர். அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தனர். அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆய்வுக்கோவையாக வெளியிடப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ந. அரங்கசாமி அவர்கள் புதுச்சேரியில் கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தாம் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவதை ஆர்வமுடன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர் கூறுகையில், “அதிகமாக நான் வெளிநாடு செல்லவில்லை. மலேசியா, சிங்கப்பூர் என இரண்டு நாட்டுக்கு மட்டும் நான் சென்றுள்ளேன். மலேசியாவுக்குச் செல்வது அங்குள்ள முருகன் கோயிலில் வழிபாடு செய்வதற்காகும். மலேசியாவில் ஒரு கடையில் பொருள்களை எடுத்து விலை விசாரித்தபொழுது அங்குப் பணிபுரிந்த பணிப்பெண் நல்ல தமிழில் விலை கூறியதுடன் பொருள்கள் குறித்த விளக்கத்தையும் நல்ல தமிழில் குறிப்பிட்டார்.”

“தமிழைத் தூய்மையாகப் பேசுவதில் மலேசியத் தமிழர்கள் சிறப்பாக உள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். இங்கு அறுபதிற்கும் மேற்பட்ட மலேசியப் பேராளர்கள் வந்தும் அவர்களைச் சந்திக்கமுடியாமல் போனது. எனினும் அடுத்தமுறை மலேசியா செல்லும்பொழுது அவர்களைக் கட்டாயம் சந்தித்துக் கலந்துரையாடுவேன் என்று ஆர்வமுடன் குறிப்பிட்டார்.”

“புதுச்சேரி ஆன்மீக பூமி. அறிஞர்கள் நிறைந்த பூமி. இந்த மாநிலம் அளவில் சிறியதாக இருந்தாலும் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் இது முதன்மையானது. இங்குக் கல்வி, தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். புதுச்சேரிக்குப் பன்னாட்டு அறிஞர்கள் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். உத்தமம் என்ற இந்த அமைப்பு உலக அளவில் கணினி, இணையத்தில் தமிழை உள்ளிட்டுப் பயன்படுத்த எடுக்கும் முயற்சிக்குப் புதுவை அரசு துணைநிற்கும் என்றார்.”

“புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்த முன்வந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமான உத்தமம் அமைப்பையும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படித்த பேராசிரியர்களையும் பாராட்டுகின்றேன் ” இவ்வாறு ந. அரங்கசாமி தெரிவித்தார்.

 

Elangovan-Prof

 

(மேற்கண்ட செய்தி மற்றும் படங்களை நமது செல்லியலுக்கு வழங்கியவர் புதுவையைச் சேர்ந்த பேராசிரியர்  முனைவர் மு.இளங்கோவன்)