Home உலகம் புதுச்சேரியில் 13ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு

புதுச்சேரியில் 13ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு

768
0
SHARE
Ad

Pondicherryபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 11 – உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 13ஆவது தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரையில் இந்தியாவின், புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.

இவ்விழா புதுவை பல்கலைக்கழகம்,புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள்,இந்திய மொழிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது.

மாநாட்டின் தொடக்க விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் ந.இரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டைத் தொடக்கி வைக்கின்றார்.

#TamilSchoolmychoice

மலேசியப் பேராளர்கள்

இம்மாநாட்டில் மலேசியாவின் பேராளர்களாக தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் முதலான கல்வியாளர்கள் திரளாக கலந்துகொள்ளும்படி மலேசிய உத்தமம் அமைப்பின் தலைவர் சி.ம.இளந்தமிழ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இம்முறை மாநாட்டிற்கு “தமிழ்மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வு”என்பதுதான் முதன்மை தலைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் இம்மாநாட்டில் மொத்தம் 7 தலைப்புகளில் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன.”என்று தெரிவித்துள்ளார்.
இம்மாநாடு மலேசியப் பள்ளிகளுக்கான விடுமுறைக் காலத்தில் நடைபெறுவதால் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் தாரளமாக இம்மாநாட்டில் கலந்துக் கொண்டு பயன் பெறலாம்.

இம்மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்து சுமார் 50 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஏறத்தாழ 37 பேர் இம்மாநாட்டிற்கு முன்பதிவு செய்துள்ளனர்.விரைவில் மேலும் 13 பேர் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இம்மாநாட்டில் கலந்துக் கொள்ளவிருக்கும் பேராளர்களுக்காக ஏர் ஆசியா நிறுவனம் சிறப்பு சலுகையை வழங்க முன்வந்துள்ளனர்.
ஆகவே ஆர்வமுள்ள கல்விமான்கள், ஆசிரியர்கள், தமிழ் இணையத் தொழில் நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உடனடியாக மலேசிய உத்தமம் அமைப்பை தொடர்புகொள்ளும்படி சி.மா.இளந்தமிழ் கேட்டுக் கொண்டார்.
உலகெங்கிலும் உள்ள 300க்கும் மேற்பட்ட கணினி தொழில் நுட்ப வல்லுநர்கள் பேராளர்களாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டிகள்

இந்த மாநாட்டை முன்னிட்டு, சில போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. வலைப்பூ (பிளோக்-Blog) உருவாக்கும் போட்டியொன்றும் நடத்தப்பட உள்ளது. இந்த வலைப்பூ உருவாக்கும் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 31க்குள் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

இந்த மாநாட்டை ஒட்டி, இணையப் பயன்பாட்டின் வழியாக தமிழுக்குத் தொண்டாற்றி வரும் ஐந்து செயற்பாட்டாளர்களை உலக அளவில் தேர்வு செய்து அங்கீகரிக்கும் வகையில் வல்லுநர்கள் குழுவொன்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அவ்வாறு தேர்வு பெறும் 5 பேர், இந்த இணைய மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுவார்கள்.
மேல்விவரங்களுக்கு 012-3143910 என்ற தொலைபேசி எண்ணின் வழி சி.மா இளந்தமிழைத் தொடர்புக் கொள்ளலாம். அல்லது www.infitt.org , www.infittmalaysia.org என்ற உத்தமம் இணையத் தளங்களிலிருந்து கூடுதல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு:

INFITT Malaysia Chapter
No: 48A, First Floor, Jalan 1/19 Seksyen 1,
PJ Old Town,
46050 Petaling Jaya
Selangor Darul Ehsan