Home இந்தியா ‘தொழில்நுட்பம் 5.0-இல் தமிழின் பங்கு’ கருப்பொருளுடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 21-வது உலகத் தமிழ் இணைய...

‘தொழில்நுட்பம் 5.0-இல் தமிழின் பங்கு’ கருப்பொருளுடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 21-வது உலகத் தமிழ் இணைய மாநாடு

1124
0
SHARE
Ad
முத்து நெடுமாறன்

*‘தொழில்நுட்பம் 5.0ல் தமிழின் பங்கு’ கருப்பொருளுடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 21-வது உலகத் தமிழ் இணைய மாநாடு

*‘ஒருமைப்பாட்டைக் கண்டுவரும் மொழிக் கணிமையில் தமிழ்க் கணிமை’ என்னும் தலைப்பில் முத்து நெடுமாறன் உரையாற்றுகிறார்.

*மலேசிய குழு ஒருங்கிணைப்புத் தலைவர் சி.ம. இளந்தமிழ் தகவல்

#TamilSchoolmychoice

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம் – INFITT- International Forum for Information Technology in Tamil) 21-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 15 தொடக்கம் 17 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் மையக் கருத்தாக ‘தொழில் நுட்பம் 5.0ல் தமிழின் பங்கு’ என்னும் பொருளில் மாநாட்டுக் கட்டுரைகள் படைப்பும் சிறப்புப் பேச்சுகளும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

சி.ம.இளந்தமிழ்

மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தம்மைத் தொடர்புகொள்ள வேண்டும் என மலேசிய குழு ஒருங்கிணைப்புத் தலைவர் சி.ம. இளந்தமிழ் கேட்டுக்கொண்டார்.

தொழிற்நுட்பம் தானியங்கி இயந்திரங்களைக் கொண்டு வளர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் தமிழ்க் கல்வி தொடங்கி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கல்வெட்டியல் எனப் பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் தமிழையும் தொழில்நுட்பம் 5.0 வழி வளர்க்கும் அனைத்து வழிவகைகளையும் இம்மாநாடு தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ்க்கணினி ஆய்வாளர்கள் வழி ஆய்ந்தறியும் முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது.

இதுகுறித்து அண்மையில் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன், உத்தமத்தின் தற்போதய தலைவர் த.தவரூபன், உத்தமத்தின் முன்னாள் தலைவர் முனைவர் மா.கணேசன் , செயல் இயக்குனர் முனைவர் இ.பொன்னுசாமி ஆகியோர் மாநாடு குறித்த விளக்கத்தையும் ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ் இணைய தொடர்பாளர்களும் ஆர்வலர்களும் கலந்துகொள்கின்றனர். மாநாட்டில் முக்கிய அங்கமாக கூகிள், மைக்ரோசாப்ட் உட்பட உலக புகழ் பெற்ற கணினி, இணையம் தொடர்புடைய 13 வல்லுனர்களின் உரைகளும் இடம்பெறவிருக்கின்றன.

அவற்றுள் நம் நாட்டைச் சேர்ந்த முரசு அஞ்சலின் தோற்றுனரும், கணினி வல்லுனருமாகிய முத்து நெடுமாறன் அவர்களின் உரை இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர், ‘ஒருமைப்பாட்டைக் கண்டுவரும் மொழிக்கணிமையில் தமிழ்க்கணிமை’ எனும் தலைப்பில், உலகளாவிய பரவலான பயனர்களுக்கு பொதுவான மொழிக்கணிமைத் தீர்வுகளை வழங்குவதற்கு பெரிய நிறுவனங்கள் எடுத்துவரும் அணுகுமுறைகள் குறித்தும், தமிழுக்காக மிகச் சிறந்த தீர்வுகளை வழங்க தமிழ்க்கணிமை ஆய்வாளர்கள் எடுத்துவரும் அணுகுமுறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்து எடுத்துக்காட்டி, இரண்டிற்கும் இடையில் எவ்வாறு ஒருமைப்பாட்டைக் காண்பது என்பது குறித்தும் பேசவிருக்கிறார் என்றும் இளந்தமிழ் தெரிவித்தார்.

பயனுள்ள இந்த தமிழ் இணைய மாநாட்டில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்கள் 012-3143910 எனும் எண்ணில் சி.ம. இளந்தமிழ் அவர்களை விரைந்து தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.