பெய்ஜிங், செப்டம்பர் 24 – சீனா வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்க எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றது. இது சமீபத்தில் சீன அரசாங்கம் அந்நிய நிறுவனங்களுக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பாகும். எனினும், சீனாவின் இந்த அறிக்கை வெளிநாட்டு நிறுவனங்களை பெரிதாக ஈர்க்க வில்லை.
கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு விவகாரங்களில் அதீத அக்கறை காட்டும் சீனா, அதற்காக தேசிய பாதுகாப்பு என்னும் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களை பெரிதும் கட்டுப்படுத்தி, தனது அடக்குமுறைகளை செலுத்தி வருகின்றது.
சமீப காலமாக சீனாவின் இந்த அடக்குமுறையால் பெரும் வர்த்தக இழப்பை சந்தித்த நிறுவனங்களுள் பெரும்பான்மையானவை அமெரிக்க நிறுவனங்களே.
ஆப்பிள் நிறுவனம் 9 நாடுகளில் வெளியிட்ட தனது புதிய தயாரிப்பான ஐபோன் 6-ஐ, முக்கிய சந்தையான சீனாவில் வெளியிட முடியாமல் தவித்து வருகின்றது.
அதற்கு முக்கிய காரணம் சீனாவின் கெடுபிடி விசாரணைகள். சீனாவின் அரசு தொலைக்காட்சி ஊடகம் கடந்த ஜூலை மாதம், ஆப்பிளின் கருவிகளும், மென்பொருட்களும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று செய்தி வெளியிட்டது.
ஆப்பிள் தனது பக்க ஞாயத்தை எடுத்துக் கூறிய போதும் சீனா, அதனை ஏற்க தயாராக இல்லை. அதேபோல் கடந்த மாதம் ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விலை நிர்ணயிப்பதில் விதிகளை மீறியதாகக் கூறி 202 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தது.
சீனாவின் கெடுபிடிகளில் இருந்து முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டும் தப்பவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனியுரிமைச் சட்டங்களை மீறியதாகக் கூறி, சீன அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
சீனாவின் இத்தகைய அடக்குமுறைகளால் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜெர்மனி, ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் என பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளன.
மற்ற ஆசிய நாடுகளை காட்டிலும் சீனாவில், வெளிநாட்டு நிறுவனங்கள் கையாளப்படும் விதம் மிகவும் தரமற்றதாக இருப்பதாக அந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக சமீபத்தில் சீனாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனம் ஆசிய நாடுகளில் அந்நிய முதலீடு தொடர்பாக எடுத்த கணக்கெடுப்பில், 60 சதவீதத்திற்கு அதிகமான நிறுவனங்கள், சீனாவில் முறையான வரவேற்பு இல்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சீனாவில் அந்நிய நிறுவனங்களின் முதலீடுகள் 7.2 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 14 சதவீதம் குறைவு என்று கூறப்படுகின்றது.
சீனாவின் இந்த நடத்தை, அதன் போட்டி நாடான இந்தியாவிற்கு பெரும் இலாபத்தை ஏற்டுத்தி வருகின்றது. பொருளாதாரம், மக்கள் தொகையென சீனாவிற்கு அடுத்த நிலையில் இருக்கும் இந்தியா, தற்போது முதலீடுகளுக்கான அந்நிய நிறுவனங்களின் சொர்க்க பூமிய திகழ்கின்றது.
மேலும், மோடி தலைமையில் அமைந்துள்ள நிலையான ஆட்சியும் அந்நிறுவனங்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.