சென்னை, பிப்.25- முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா தனது 65-வது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடினர். அதிமுக தலைமை அலுவலகத்தில் 65 கிலோ கேக் வெட்டி விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மலரும் வெளியிடப்பட்டது.
பிரதமர் வாழ்த்து:- முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வருக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா வாழ்த்துக் கடிதம் மற்றும் பூங்கொத்து அனுப்பினார். தொலைபேசி வாயிலாகவும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன், முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் ஷேக் தாவூத், தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது, இந்தியன் யூனியன் காயிதேமில்லத் லீக்கின் தலைவர் தாவூத் மியாகான், தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் சச்சு, மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி, தொழிலதிபர்கள் எம்.ஏ.எம். ராமசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம், நடிகை சரோஜாதேவி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.