கோம்ஸ், அக்டோபர் 3 – சிரியாவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில், 41 குழந்தைகள் பலியாகி இருப்பாதாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்து கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக அங்கு புரட்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், சமீபத்தில் அங்கு ஐஎஸ்ஐஎஸ்-ன் எழுச்சிக்குப் பிறகு அது ஆயுதப் போராட்டமாக மாறியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவை இணைத்து தனித்த இஸ்லாமிய தேசமாக மாற்றும் முடிவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அங்கு பல்வேறு கட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்நாட்டின் கோம்ஸ் நகரில் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில், 41 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
மேலும் பல மாணவர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் பலரின் நிலை கவலைக் கிடமாக மாறி உள்ளதாகவும் அங்குள்ள மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.