Home நாடு மஇகா : 4 மாநிலத் தலைவர்கள் பழனிவேலுவுக்கு எதிராகப் போர்க்கொடி! இரண்டு தலைவர்கள் திரிசங்கு நிலையில்...

மஇகா : 4 மாநிலத் தலைவர்கள் பழனிவேலுவுக்கு எதிராகப் போர்க்கொடி! இரண்டு தலைவர்கள் திரிசங்கு நிலையில் தடுமாற்றம்!

631
0
SHARE
Ad

MIC-Logoகோலாலம்பூர், அக்டோபர் 14 – மஇகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீதான முடிவை சங்கப் பதிவதிகாரி மேலும் காலம் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்ற நெருக்குதல் வலுத்து வருகின்றது.

இதன் தொடர்பில் எதிர்வரும் அக்டோபர் 16ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தில் ஆட்சேப மனு  வழங்கும் போராட்டம் நடைபெறவிருக்கின்றது.

சங்கப் பதிவதிகாரி மறுதேர்தலுக்கு உத்தரவிட்டால், தேர்தல் குழுத் தலைவர் என்ற முறையிலும், கட்சித் தலைவர் என்ற முறையிலும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பதவி விலக வேண்டுமென்றும், அனைத்து பதவிகளிலிருந்தும் மற்ற தலைவர்களும், தார்மீக ரீதியில் பதவி விலகி புதிய தேர்தலுக்கு வழிவிட வேண்டும் என்றும் மறுதேர்தல் புகார்கள் மீதான விவகாரத்தைத் தலைமையேற்று முன்னின்று நடத்தி வரும் டத்தோ டி.மோகன் அறைகூவல் விடுத்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், சட்டரீதியாக இவையெல்லாம் சாத்தியமா என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய விவகாரம்.

இதற்கிடையில் தேசியத் தலைவர் பழனிவேலுவோ, சங்கப் பதிவதிகாரியின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று கூறியிருக்கின்றார்.

டிசம்பர் மஇகா பொதுப் பேரவை தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தும்

g-palanivel_mic-300x198எதிர்வரும் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா ஆண்டுப் பொதுப் பேரவைக்கு முன்பாக சங்கப் பதிவதிகாரி தனது முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

காரணம், கடந்த ஆண்டுப் பொதுப் பேரவையின் கூட்டக் குறிப்புக்கள், தேர்தல் முடிவுகள் மீதான அறிக்கை அனைத்தும் இந்த ஆண்டுக்கான பொதுப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

அவற்றை, மஇகா பொதுப் பேரவையில் பேராளர்கள் முன்மொழிந்து, வழிமொழிந்து ஏற்றுக் கொண்டுவிட்டால், அதன் பின்னர் மஇகா தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த மஇகா பொதுப் பேரவையும் ஏற்றுக் கொண்டதாகவே சட்டரீதியாக அர்த்தம் கொள்ளப்படும்.

அதன் பின்னர், தேர்தல் முறைகேடுகள் மீதான புகார்கள் தானாகவே, வலுவிழந்து, தேவையற்ற ஒன்றாகிவிடும் என இந்த விவகாரம் குறித்து நன்கறிந்த சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Dr-S.-Subramaniamடிசம்பர் பொதுப் பேரவை வெற்றிகரமாக நடந்து முடிந்து, கடந்த ஆண்டு தேர்தல் முடிவுகளும், ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால், அதன்பின்னர், சங்கப் பதிவதிகாரி எந்த முடிவை அறிவித்தாலும் அதனால் சட்டரீதியான பாதிப்பு இருக்கப் போவதில்லை.

எனவே, ஒன்று டிசம்பர் 13ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் மஇகா மாநாட்டுக்கு முன்பாக சங்கப் பதிவதிகாரி தேர்தல் முறைகேடுகள் குறித்த தனது முடிவை அறிவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், சங்கப் பதிவதிகாரி, சாமர்த்தியமாக,  தனது முடிவை மேலும் ஒத்திப் போடலாம். டிசம்பரில் நடைபெறும் மாநாடு, எந்தவிதப் பிரச்சனையும் இன்றி, கடந்த ஆண்டு தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்வதாக, கூட்டக் குறிப்புகளை ஏற்றுக் கொண்டுவிட்டால், அதன் பின்னர் சங்கப் பதிவதிகாரி, தனது முடிவை அறிவிக்கலாம்.

அதாவது, மஇகா பொதுப் பேரவையே, கடந்த ஆண்டு தேர்தல் முடிவுகளை உறுதி செய்துவிட்டதால், அந்த தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படும் என்ற ரீதியில் சங்கப் பதிவதிகாரி அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் இலாகாவிலேயே நேரடியாக ஆட்சேப மனு எதிர்வரும் அக்டோபர் 16ஆம் தேதி அளிக்கப்பட இருப்பதால், பொதுமக்கள் பார்வையில் பிரதமரும் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சராக சாஹிட் ஹமிடி இருந்தாலும், சங்கப் பதிவகம் உள்துறை அமைச்சின் கீழ் வந்தாலும், பிரதமருக்கு அளிக்கப்படும் நெருக்குதலால், சங்கப் பதிவதிகாரியும் தனது முடிவை அறிவிக்கும் நெருக்குதலுக்கு தற்போது ஆளாகியுள்ளார்.

எதிர்க்கட்சியான ஜசெக குறித்த தேர்தல் முறைகேடுகளை ஓரிரு மாதத்திலேயே விசாரித்து தனது முடிவை அறிவித்த சங்கப் பதிவதிகாரி, தேசிய முன்னணி உறுப்பியக் கட்சியான மஇகா விவகாரத்தில் மட்டும் ஏன் ஒரு வருடமாக முடிவைச் சொல்லாமல் இழுத்தடிக்கின்றார் – ஏன் இப்படி பாரபட்சம் காட்டுகின்றார் – என்ற கண்டனங்களும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

மஇகா மாநிலத் தலைவர்களிடையே பிளவு

Saravanan Sothi 440 x 215இத்தகைய அரசியல் நிலைமையில் மஇகாவின் மாநிலத் தலைவர்களில் நால்வர் பழனிவேலுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க இணைந்து கைகோர்க்க தயாராக இருப்பதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஇகா மாநிலத் தலைவர் நியமனம் என்பது தேசியத் தலைவரின் பிரத்தியேக உரிமையாகும். எப்போது வேண்டுமானாலும் அவர் ஒருவரை நியமிக்கலாம் – எப்போது வேண்டுமானாலும் – அவர் ஒருவரை நீக்கலாம்.

இன்றைய மாநில தலைவர்களில், பழனிவேலுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பவர்களின் பகிரங்கமாக முன்னணி வகிப்பவர் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் டத்தோ சரவணன். இவரது நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்பதால், விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை.

இரண்டாவதாக, ஜோகூர் மாநிலத் தலைவர் டத்தோ சி.பாலகிருஷ்ணன், பழனிவேலுவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க தெளிவான முடிவுக்கு வந்துவிட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகின்றார்.

Dato S.Balakrishnanகடந்த ஜோகூர் மாநிலக் கூட்டத்தில் செனட்டர் விவகாரத்தில் எல்லா தொகுதித் தலைவர்களும் சகட்டு மேனிக்கு தேசியத் தலைவரைக் கடுமையாக விமர்சிக்க பாலகிருஷ்ணன் இடமளித்த சம்பவத்தை இதற்கு உதாரணமாக ஜோகூர் மஇகா வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

உதவித்தலைவர் என்ற முறையில் தனக்கு ஒரு செனட்டர் பதவி வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்த்த பாலகிருஷ்ணன், அது கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியானவுடன், துணைத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் பக்கம் சாய்வதற்கு முடிவு செய்துவிட்டார்.

இனி மஇகாவில் எஞ்சி இருப்பது ஒரே ஒரு செனட்டர் பதவிதான். டத்தோ ஜஸ்பால் சிங் வகிக்கும் அந்தப் பதவி எதிர்வரும் நவம்பரில் காலியாகின்றது. ஜஸ்பால் ஒரு தவணை மட்டுமே பதவி வகித்திருப்பதால், அவருக்கே மீண்டும் அந்த செனட்டர் பதவி வழங்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.

எனவே, இனி அடுத்த மூன்றாண்டுகளுக்கு, மஇகாவில் கொடுப்பதற்கு செனட்டர் பதவி எதுவுமே இல்லை. திட்டமிட்டபடி, எதிர்வரும் 2016 மார்ச்சில் நடப்பு தேசியத் தலைவர் பழனிவேலு பதவி விலகிவிட்டால், அதன்பின்னர் இடைக்காலத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியத்தின் விருப்பப்படிதான் பதவி நியமனங்கள் நிகழும் என்பதால், தற்போது செனட்டர் பதவியைக் குறி வைத்திருக்கும் தலைவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக சுப்பிரமணியத்திடம் அரசியல் தஞ்சம் புக தயாராகி விட்டார்கள்.

சோதிநாதனுக்கும் இதே நிலைமைதான்! முதலாவது தேசிய உதவித் தலைவராக வெற்றி பெற்றாலும், அவருக்கும் பழனிவேல் செனட்டர் பதவி வழங்காமல் புறக்கணித்து விட்டார்.

எனவே, தற்போது நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவராக இருக்கும்  அவர், மீண்டும் அரசியலில் உயர் நிலைக்கு வருவதற்கு இருக்கும் ஒரே வழி அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெல்வதுதான்.

அவர் குறிவைத்திருப்பது, தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியை!

ஆனால், அடுத்த பொதுத் தேர்தலை, மஇகா, டாக்டர் சுப்பிரமணியத்தின் தலைமையில் சந்திக்கும் என்பதால், சோதிநாதன், சுப்பிரமணியத்திற்கான தனது ஆதரவை இப்போதே வழங்க வேண்டிய இக்கட்டான நிலைமையில் இருக்கின்றார். அப்படி அவர் டாக்டர் சுப்பிரமணியத்தோடு இப்போது இணையாவிட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் அவருக்கு டாக்டர் சுப்பிரமணியமும் நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் போவதில்லை.

எனவே, மாநிலத் தலைவர் என்ற முறையில் டத்தோ சோதிநாதனும் பிரச்சனை என்று வந்தால், டாக்டர் சுப்பிரமணியத்துக்கே தனது ஆதரவை வழங்கி, தனது எதிர்கால அரசியல் வாழ்வுக்கு உயிர் கொடுக்க, முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நான்காவதாக, பினாங்கு மாநிலம். இதன் மாநிலத்தலைவர் கருப்பண்ணன் பழனிவேலுவுக்கு நெருக்கமான ஆதரவாளர் என்றாலும், மாநிலத்தின் கிளைகளின் ஆதரவை முற்றாக இழந்து விட்ட நிலையில் அவர் பெயரளவுக்கு பொம்மைத் தலைவராகவே நீடித்து வருகின்றார்.

பினாங்கின் பெரும்பாலான கிளைகள், மத்திய செயற்குழு உறுப்பினர்களான டத்தோ ஹென்றி பெனடிக்ட் ஆசீர்வாதம், தினகரன் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டிலும், மேலும் சில கிளைகள், டாக்டர் சுப்பிரமணியத்தை நேரடியாக ஆதரிக்கும் முடிவிலும் இருக்கின்றன.

எனவே, பினாங்கு மாநிலமும் டாக்டர் சுப்பிரமணியத்தின் பின்னால் உறுதியுடன் நிற்கின்றது. பெரும்பான்மை கிளைகள் கருப்பண்ணனுக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்தி அந்த ஆவணம் எந்த நேரத்திலும் மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்தப்படலாம் என்ற நிலமை இருந்து வருகின்றது.

ஆக, மஇகா தலைமைத்துவ போராட்டத்தில் நான்கு மாநிலங்கள் டாக்டர் சுப்பிரமணியத்தின் பின்னால் உறுதியாக அணிவகுத்து நிற்கின்றன.

திரிசங்கு நிலையில் இரண்டு மாநிலங்கள்

இரண்டு மாநிலத் தலைமைத்துவங்கள் இங்கே போவதா – அங்கே போவதா என திரிசங்கு நிலையில் ஊசலாடிக்கொண்டிருப்பதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலாக்கா மாநிலத் தலைவர், டத்தோ மகாதேவன், டாக்டர் சுப்பிரமணியத்தோடு நெருக்கமான நட்புறவைப் பாராட்டுபவர். அதே வேளையில், பழனிவேலுவுக்கும் ஆதரவு தருபவர்.

சட்டமன்ற உறுப்பினரான இவரும் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்று ஆட்சிக் குழு கட்டிலில் அமர வேண்டுமானால், அதற்கு டாக்டர் சுப்பிரமணியத்தின் கடைக் கண் பார்வையை இப்போதே பெற்றாக வேண்டும்.

எனவே, நிலைமை கொஞ்சம் தெளிவாகி விட்டால், பகிரங்கமாக டாக்டர் சுப்பிரமணியத்தோடு மகாதேவனும் கைகோர்த்துக்கொண்டு விடுவார் என மலாக்கா மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெடா மாநிலத் தலைவர் டத்தோ கணேசனும் இதே முடிவுக்கு வந்துவிட்டார் என கெடா மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் எந்தப்பதவியும் கிடைக்கவில்லை. மந்திரி பெசாரின் உதவியாளர் பதவியும் கிடைக்கவில்லை. மாநிலத்திலுள்ள பெரும்பாலான கிளைத் தலைவர்களின் எதிர்ப்பு ஒரு புறம்.

இந்த சூழ்நிலையில் மீண்டும் கெடா மாநில சட்டமன்றத்திற்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற தனது கனவு பலிக்க வேண்டுமென்றால், அதற்கும் டாக்டர் சுப்பிரமணியத்தின் தயவு வேண்டும் என்பதை உணர்ந்திருக்கும் டத்தோ கணேசன்,

தற்போது தடுமாற்றத்தில் இருந்தாலும், கூடிய விரைவில் டாக்டர் சுப்பிரமணியத்தின் அணியில் வந்து அமோகமாக இணைந்து கொள்வார் என்றும் அதற்கான திரைமறைவு வேலைகள், பேச்சு வார்த்தைகள், தொடங்கி விட்டதாகவும், கெடா மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை சிலாங்கூர், பேராக் ஆகிய இரண்டையும பழனிவேலுவே நேரடியாகத் தலைமையேற்றிருக்கின்றார்.

கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ், சபா ஆகியவை அரசியல் ரீதியாக தாக்கம் ஏற்படுத்த முடியாத சின்னஞ் சிறிய மாநிலங்கள்.

பகாங் மாநிலம் மட்டுமே பழனிவேலுவின் பின்னால் உறுதியாக நிற்கின்றது. அதற்குக் காரணம் அண்மையில் செனட்டராக நியமனம் செய்யப்பட்ட டத்தோ குணசேகரன் அதன் தலைவராக இருப்பதுதான்.

அந்த நன்றிக் கடனுக்காக அவர் பழனிவேலுவின் பின்னால் நிற்கின்றார்.

ஆக,

மஇகா தலைமைத்துவப் போராட்டம் வெடித்தால், பெரும்பாலான மாநிலத் தலைமைத்துவங்கள் டாக்டர் சுப்பிரமணியம் அணியின் பக்கமே அணி வகுத்து நிற்கும் என மஇகாவின் நிகழ்வுகளைக் கண்காணித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.