கிளிநொச்சி, அக்டோபர் 15 – தமிழ் ஈழம் எனும் பிரிவினைவாத கோரிக்கையை கைவிட்டால், அதிபர் ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே உரையாற்றிய போது கூறியுள்ளதாவது:-
“தமிழ் தேசிய கூட்டணியும், இலங்கை வாழ் தமிழர்களும், தனி ஈழம் என்ற பிரிவினைவாத கோரிக்கையை கைவிட வேண்டும். அவ்வாறு அவர்கள் கைவிட்டால் அனைத்து அதிகாரங்களும் அதிபரிடத்தில் இருக்கும் தற்போதைய ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவேன்”
“கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற தீவிரவாதச் செயல்களினால், எண்ணற்ற உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளீர்கள். தற்போது, இலங்கை அரசு தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் மூலம், மக்கள் எவ்வித அச்சமும், சந்தேகமுமின்றி சுதந்திரமாக வாழ முடியும். விடுதலைப் புலிகளை அழிக்கவே இலங்கை இராணுவம் போரில் ஈடுபட்டதே தவிர, தமிழர்களுக்கு எதிராக அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், ராஜபக்சே எதிர்வர இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டே இவ்வாறான பொய் பிரச்சாரங்களை கூறிவருவதாகவும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் அழிவிற்கு காரணமாக இருந்த அவர், ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு உட்பட்டே ஆகவேண்டும் என இலங்கைத் தமிழர்கள் கூறிவருகின்றனர்.