Home நாடு மஇகா மறுதேர்தல்: முடிவைத் தெரிவிக்க சங்கப் பதிவதிகாரிக்கு ஓராண்டு அவகாசமா? அதனால்தான் நெருக்குதல்!

மஇகா மறுதேர்தல்: முடிவைத் தெரிவிக்க சங்கப் பதிவதிகாரிக்கு ஓராண்டு அவகாசமா? அதனால்தான் நெருக்குதல்!

576
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர், அக்டோபர் 15 – அரசியல் கட்சிகள் உட்பட எல்லா சங்கங்களும், சங்கப் பதிவதிகாரியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன. சங்கத்திலோ, அரசியல் கட்சியிலோ ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக, அதனை விசாரித்து தீர்வு வழங்குவதுதான் சங்கப் பதிவதிகாரியின் தலையாய கடமையாகும்.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த ஜனநாயக செயல் கட்சியின் தேர்தல் முடிவுகள் குறித்து புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது உடனடியாக அதனை விசாரித்து அந்தக் கட்சி மீண்டும் தனது தேர்தலை நடத்த வேண்டும் என சங்கப் பதிவதிகாரி அறிவித்தார்.

ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல் மீதான புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஏறத்தாழ 11 மாதங்கள் ஆகிவிட்டன.

#TamilSchoolmychoice

ஆனால், இதுவரை இந்தப் புகார்கள் மீதான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

ஐசெக புகாருக்கு உடனடி தீர்ப்பு

ஜசெக விவகாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட்ட சங்கப் பதிவதிகாரி, ஆளுங் கட்சியான தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியான மஇகா மீதான புகார்கள் என வரும்போது மட்டும் ஏன் இத்தனை மெத்தனமாக, மெதுவாக, காலத்தைக் கடத்தி விசாரணைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார் என்பது பொதுமக்கள் மத்தியில் புரியாத புதிராக இருக்கின்றது.

ஆங்கிலத்தில், – Justice delayed is Justice denied –  என்றொரு பழமொழியைக் கூறுவார்கள். அதாவது தாமதப்படுத்தப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியாகும் என்பதுதான் அதன் அர்த்தம்.

ஓர் ஆண்டாக ஒரு புகாரை சங்கப் பதிவதிகாரி விசாரித்துக் கொண்டிருக்கின்றார் என்றால், அது ஒன்று அவரது இயலாமையைக் காட்டுகின்றது.

இல்லையேல், சங்கப் பதிவதிகாரியின் நடவடிக்கை, நஜிப் அரசாங்கத்தின் பாரபட்சமான அணுகுமுறையையும், மெத்தனத்தையும், அக்கறையின்மையையும் பிரதிபலிக்கின்றது – எடுத்துக் காட்டுகின்றது என்றே நாம் பொருள் கொள்ள வேண்டியிருக்கின்றது.

முறையாக இந்தப் புகாரை உடனுக்குடன் விசாரித்து, யாருக்கு சாதகமோ, பாதகமோ, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அறிவித்திருந்தால், இந்நேரம் இந்தப் பிரச்சனை முடிந்து போன – கடந்து போன ஒரு விவகாரமாகியிருக்கும்.

நாளை பிரதமர் அலுவலகம் முன் மஇகா அதிருப்தியாளர்கள் கூட்டம் கூடி போராட்டம் நடத்த வேண்டிய அவசியமும் – ஆட்சேபனை மனு அளிக்க வேண்டிய ஏற்பட்டிருக்காது.

அரசாங்க இலாகாவின் தலைமை அதிகாரி ஒருவர் ஏதாவது காரணங்களால் –

தனது மெத்தனத்தால் – அல்லது தனக்கு விடுக்கப்பட்ட நெருக்குதல்களால்,

தனது முடிவுகளை காலத்தோடு எடுக்காமல், ஒத்திப் போடுவதால் மக்களிடையே எத்தகைய அளவுக்கு அவநம்பிக்கை ஏற்படும் என்பதற்கும்,

பிரதமருக்கு ஆட்சேப மனு வழங்கும் அளவுக்கு விவகாரம் தேவையில்லாமல் விசுவரூபமெடுத்து நிற்கும் என்பதற்கும் மஇகா தேர்தல் விவகாரத்தில் சங்கப் பதிவதிகாரியின் காலதாமதம் நல்ல உதாரணமாகும்.